Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

அம்ருத் திட்டத்தில் 51 நகரங்களுக்கு விரைவில் புதிய மாஸ்டர் பிளான்

ADDED : ஜூலை 19, 2024 12:42 AM


Google News
சென்னை:மத்திய அரசின், 'அம்ருத் 2.0' திட்டத்தில், தமிழகத்தில், 51 நகரங்களுக்கு புதிய, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு, அம்ருத் திட்டத்தைத் துவக்கியது. இதில் நிதி பெற தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு, முறையான முழுமை திட்டம் இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நாகப்பட்டினம், வேலுார், கடலுார், ராமேஸ்வரம், காஞ்சிபுரம், காரைக்குடி, தஞ்சை, ராஜபாளையம், புதுக்கோட்டை, நாகர்கோவில், கும்பகோணம், துாத்துக்குடி.

ஆம்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம் ஆகிய 17 நகரங்களுக்கு, முழுமை திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், ராஜபாளையம் நகரத்தின் முழுமை திட்டத்துக்கு மட்டுமே, அரசின் ஒப்புதல் கிடைத்தது. நாகப்பட்டினம், சேலம், வேலுார், திருநெல்வேலி நகரங்களின் முழுமை திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் அம்ருத் திட்டத்தின் முதல் பகுதியில், 17 நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதில், 12 நகரங்களின் திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன.

இந்நிலையில், அம்ருத் 2.0 எனப்படும் இரண்டாம் பாக திட்டத்தில், 50,000 முதல், 99,000 வரையிலான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு புவிசார் அடிப்படையில், புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், 54 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், 51 நகரங்களுக்கான முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு முதல் தவணையாக, 9.87 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழுமை திட்டங்களில், இந்நகரங்களில், அடுத்த 20 ஆண்டுகளில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கம், வாகன பெருக்கம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள் சேர்க்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் நில பயன்பாட்டுக்கான வகைப்பாடுகள் வரையறுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us