Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்

'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்

'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்

'நீட்' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்

ADDED : ஜூன் 05, 2024 01:42 AM


Google News
சென்னை:மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் எட்டு மாணவர்கள் உள்பட 67 பேர், முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த ஆண்டுக்கான தேர்வு மே 5ல் நாடு முழுதும் நடந்தது. மொத்தம், 24.06 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள், http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியாகின. இதில், தேசிய அளவில், 67 மாணவர்கள், 720க்கு, 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக, ராஜஸ்தானில் இருந்து, 11; தமிழகத்தில் இருந்து, எட்டு; மஹாராஷ்டிராவில் இருந்து, ஏழு பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேசிய அளவில், 10 திருநங்கையர், 7.69 லட்சம் மாணவியர் மற்றும் 5.47 மாணவர்கள் என, 13.16 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இவர்களில், 3.34 லட்சம் பொது பிரிவினர், 6.19 லட்சம் மிக பிற்படுத்தப்பட்டோர்; 1.79 பட்டியலினத்தவர்; 68,479 பழங்குடியினத்தவர்; 1.16 லட்சம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில், 1.16 லட்சம்; மஹாராஷ்டிராவில், 1.43 லட்சம்; ராஜஸ்தானில், 1.21 லட்சம்; தமிழகத்தில், 89,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் நாடு முழுதும் உள்ள, 80,000 மருத்துவ இடங்களுக்கு போட்டியில் உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர் ஸ்ரீராம், 720க்கு, 720 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல, சென்னை அண்ணா நகர் வேலம்மாள் பள்ளியை சேர்ந்த யூசுப் என்ற மாணவர், 720 மதிப்பெண் பெற்று உள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் படித்து, அரசின் இலவச பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரம், பள்ளிக்கல்வி துறையால் இன்று வெளியிடப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us