மேட்டூர் அணை நீர்மட்டம் 44.62 அடியாக சரிவு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் நீர் திறப்பதில் சிக்கல்
மேட்டூர் அணை நீர்மட்டம் 44.62 அடியாக சரிவு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் நீர் திறப்பதில் சிக்கல்
மேட்டூர் அணை நீர்மட்டம் 44.62 அடியாக சரிவு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் நீர் திறப்பதில் சிக்கல்
ADDED : ஜூன் 07, 2024 07:45 PM
மேட்டூர் அணை நீர்மட்டம், 44.62 அடியாக சரிந்துள்ளதால் நடப்பாண்டு குறித்தபடி ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., அணையில் இருந்து டெல்டா சாகுபடிக்கு நீர்திறக்க நீர்மட்டம் குறைந்தபட்சம், 90 அடி, நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன், 12ல் நீர்மட்டம், 103.35 அடியாகவும், நீர்இருப்பு, 69.25 டி.எம்.சி.,யாகவும் இருந்ததால் முதல்வர் ஸ்டாலின், 13 மாவட்டங்களில், 4.5 லட்சம் ஏக்கர் குறுவை, 12.6 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீரை திறந்து வைத்தார். அதன் பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிய துவங்கியது.
அதற்கேற்ப கடந்த ஆண்டு ஆக., 27ல், 10,000 கனஅடியாக இருந்த நீர் திறப்பு அக்.,10ல், 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி முழுமையாக பாதித்தது. அணை கட்டி, 89 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை குறித்தபடி ஜூன் 12ல், 19 ஆண்டு, முன்னதாக, 11 ஆண்டு, தாமதமாக, 60 ஆண்டு பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 44.62 அடியாகவும், நீர் இருப்பு, 14.59 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. வினாடிக்கு, 529 கனஅடி நீர் வந்தது. காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு, 2,100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
டெல்டா குறுவை சாகுபடிக்கு வரும், 12ல் நீர்திறக்க அணைக்கு இன்னமும், 37.5 டி.எம்.சி., நீர் தேவை. அதற்கு இன்னமும், 4 நாட்கள் மட்டுமே உள்ளன. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால், 4 நாட்களில், 37.5 டி.எம்.சி., நீர் அணைக்கு வர வாய்ப்பு இல்லை. இதனால், நடப்பாண்டு, 13 காவிரி கரையோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசனம், ஏரி பாசனம் தவிர இதர, 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வழங்கும் கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டத்தில், 49.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையில் நேற்று, 13 டி.எம்.சி., 19.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கபினியில், 8 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது. அந்த அணைகளில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா, 2023 - 24ல், 177.25 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டிய நிலையில், 50 சதவீதத்தை விட குறைவாக, 81.4 டி.எம்.சி., நீர் மட்டுமே வழங்கியுள்ளது.
நடப்பாண்டு ஜூன் 12ல் மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாது என்பதால், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை, டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே குறுவை, சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியும். இதனால், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள, 13 மாவட்ட காவிரி கரையோர விவசாயிகள் குறுவை பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதால் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து மூத்த வேளாண் வல்லுனர் கலைவாணன் கூறுகையில், ''மேட்டூர் அணையை ஜூன் 20க்குள் திறந்தால்தான், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை துவங்க முடியும். நடப்பு ஆண்டில் அதற்கான வாய்ப்பு இல்லை. டெல்டா மாவட்டங்களில், இயல்பான பரப்பளவை விட குறைவாகவே குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். இந்தாண்டு, ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே வாய்ப்புள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் குழு -