Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., வெங்கடேசன்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., வெங்கடேசன்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., வெங்கடேசன்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்த மதுரை எம்.பி., வெங்கடேசன்

ADDED : மார் 12, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
மதுரை: “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உனக்கு தேவையான தீர்ப்பை எழுதிக் கொடுத்துவிட்டு, நாளை ஓய்வு பெற்றபின், ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒரு போதும் செய்ய மாட்டோம்,” என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதியை, மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் மறைமுகமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மார்ச் 25ல் மத நல்லிணக்க கூட்டமும், மார்ச் 9ல் ஊர்வலம், மாநாடு நடத்தவும் அனுமதி கேட்டு, இரு வேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தன.

பிரச்னை


இதை, மார்ச் 5ல் விசாரித்த நீதிபதி பி.தனபால், 'திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இருதரப்பினரிடையே பிரச்னை நிலவுகிறது. கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

'பங்குனி திருவிழா நடக்க உள்ள நிலையில் கூட்டம் நடத்த அனுமதித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' எனக்கூறி, அனுமதி மறுத்தார்.

இந்நிலையில், மார்ச் 9ல் மதுரை, கே.கே.நகர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் ஹாலில், மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில், நீதிபதி தனபாலை, எம்.பி., வெங்கடேசன் மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:


ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எல்லா துறைகளிலும் பா.ஜ., கரங்களை நீட்டி வருகிறது.

கடந்த 1990ல் தோற்று ஓடியவர்கள் இன்று பிரச்னை செய்வதற்காக மீண்டும் வந்துஉள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கப் போகிறோம் என்று,தமிழகம் முழுதிலும் இருந்தும் கிளம்பி வந்துவிட்டனர்.

ஆனால், அழகர்கோவில் மலை, அரிட்டாபட்டி மலையை விற்பதற்காக டங்ஸ்டன் திட்டத்திற்கு ஏலம் விட்டது, இந்த பா.ஜ., அரசு தான். போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் திருப்பரங்குன்றத்தை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகத் தான் அணுகுகின்றனரே தவிர, சமூகப் பிரச்னையாக பார்ப்பதில்லை.

இதனால் தான், தடை உத்தரவு இருந்தும் கூட பா.ஜ., அமைப்பு என்ற காரணத்தால் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.

ஆனால், அனைத்து கட்சிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மதத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு, பொதுவெளியில் அனுமதி தர முடியாது என நீதிமன்றம் கூறுகிறது.

அயோக்கியன்


தீயை பற்ற வைப்பவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால், உன்னை போல முட்டாள் இந்த உலகில் இல்லை.

தீயை பற்ற வைப்பவன் அழிவு சக்தி; தீயை அணைப்பவன் காக்கும் சக்தி.

உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்துவிட்டு, நாளை ஓய்வு பெற்றபின், ஒரு மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்.

எந்த துறை என்றாலும், எந்த உயரிய பதவியில் இருந்தாலும், எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிமன்ற அவமதிப்பு


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., ஒருவர், நீதிமன்ற உத்தரவை, 'ஆதாயம்' பெற வழங்கிய தீர்ப்பு என விமர்சித்திருப்பது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் பேச்சுக்கு, ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது:


அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட எம்.பி., வெங்கடேசன், நீதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

மக்கள் விடுதலை கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல் ராஜன், 'மலை மீது நான் தடையை மீறி ஆட்டை வெட்டி உணவளிப்பேன்; என்னை தடுத்து பார்' என்று திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் பேசிஉள்ளார்.

சட்டம் - ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், மத கலவரத்தையும், மத வெறியையும் துாண்டும் விதமாக ஒவ்வொருவரும் மாநாட்டில் பேசியுள்ளதை கண்டிக்கிறோம்.

வழக்கு விசாரணையில் இருக்கும் போது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை பற்றி உள்ளரங்க மாநாட்டில் பேசியது, நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

நீதிபதியை களங்கப்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வெங்கடேசன் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us