ஜாபர் சாதிக் 'பினாமி' வீடுகளில் அமலாக்க துறையினர் 'ரெய்டு'
ஜாபர் சாதிக் 'பினாமி' வீடுகளில் அமலாக்க துறையினர் 'ரெய்டு'
ஜாபர் சாதிக் 'பினாமி' வீடுகளில் அமலாக்க துறையினர் 'ரெய்டு'
UPDATED : ஜூலை 17, 2024 04:39 AM
ADDED : ஜூலை 17, 2024 12:04 AM

சென்னை : போதை பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான, ஜாபர் சாதிக்கின் 'பினாமி' வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 36, வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது தொடர்பாக, டில்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகளும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனைவியிடம் விசாரணை
இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஏற்கனவே அவரது மனைவி அமீனா பானுவிடம், 32, விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவரிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் விசாரித்தனர்.
ஜாபர் சாதிக்கின் நண்பரான, சினிமா பட இயக்குனர் அமீருக்கு, வங்கி கணக்கு வாயிலாக, 3.93 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல, ஜாபர் சாதிக், 15 லட்சம் ரூபாய் வரை, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு, அமீனா பானுவின் வங்கிக் கணக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை செய்த பின், கணவன், மனைவி இருவரையும் நேருக்கு நேர் அமர்த்தி விசாரிக்க உள்ளதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பினாமி வீடுகளில் 'ரெய்டு'
சென்னை ஆவடி காமராஜ் நகர், 2வது தெருவைச் சேர்ந்த ஜோசப், 45, வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, திருவேற்காடு சிவன் கோவில் தெருவில், ஜோசப்பின் இரண்டாவது மனைவி ஆயிஷா, 35, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது இரண்டு இடங்களுக்கும் ஜோசப் மற்றும் ஆயிஷா ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள், ஜாபர் சாதிக் பினாமியாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
ஜாபர் சாதிக், ஆயிஷாவின் வங்கி கணக்கிற்கு, பணம் அனுப்பி உள்ளார். அதுபற்றி ஆயிஷாவிடம் விசாரணை நடத்தி, அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, 12 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.