85,841 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கல்
85,841 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கல்
85,841 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கல்
ADDED : ஜூன் 07, 2024 01:50 AM
சென்னை, சென்னை உள்ளிட்ட, ஒன்பது நகரங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், வசிக்கும், 85,841 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை. திருச்சி உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் ஏழை மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு விபரம்
இவ்வாறு மக்கள் வசிக்கும் இடங்களை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்ட பகுதிகளாக அறிவித்தது. இதையடுத்து, இப்பகுதிகளில் மக்களுக்கான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் இந்நிலங்களை உள்ளது உள்ளபடி என்ற அடிப்படையில், ஒதுக்கீட்டாளர்களுக்கு கிரையம் செய்து கொடுக்க வாரியம் திட்டமிட்டது. இதன்படி, குடியிருக்கும் மக்கள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்தது.
1.35 லட்சம் பயனாளிகள்
இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அரசு துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் குடிசை மக்களுக்கான திட்ட பகுதிகளாக மாறியுள்ளன.
இதில், 1.35 லட்சம் குடும்பங்கள் ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களில், 49,443 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய, 85,841 குடும்பங்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான உரிமை மாற்றத்தில் நிலவிய பிரச்னைகள் முடிக்கப்பட்டு, விற்பனை பத்திரம் வழங்க துவங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.