ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்றார் 'இஸ்ரோ' சோம்நாத்
ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்றார் 'இஸ்ரோ' சோம்நாத்
ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்றார் 'இஸ்ரோ' சோம்நாத்
ADDED : ஜூலை 20, 2024 02:32 AM

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யின் 61வது பட்டமளிப்பு விழாவில், 2,636 பேருக்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.
இந்திய உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யின் 61வது பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்தது. ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, கல்லுாரியின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கல்லுாரியின் நிர்வாகக்குழு தலைவர் பவன் கோயங்கா விருந்தினர்களை வரவேற்றார்.
இந்த விழாவில், அமெரிக்காவைச் சேர்ந்த, 2012ல் நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி பிரையன் கோபில்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் அவர் பேசுகையில், ''காலநிலை மாற்றம் தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அடுத்த தலைமுறை மாணவர்கள், காலநிலை மாற்றத்தை சமாளிக்கத் தயாராக வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவில், 2,636 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 444 பேருக்கு பிஎச்.டி., பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' தலைவர் சோம்நாத், மெக்கானிக்கல் துறையில் ஆராய்ச்சி செய்து, பிஎச்.டி., பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்றவர்களில், 277 பேர் இரட்டை பட்டப் படிப்புக்கான பட்டம் பெற்றனர். 764 பேர் பி.டெக்., பட்டம் பெற்றனர்; அவர்களில், 27 பேர் 'ஹானர்ஸ்' என்ற சிறப்புத் தகுதி பெற்றனர். மேலும், எம்.டெக்., - 481 பேர், எம்.எஸ்.சி., - 151, எம்.எஸ்., - 236 பேர் பட்டங்கள் பெற்றனர்.
சந்திரயானின் அடுத்த திட்டம், விண்வெளியில் இந்தியாவின் நிலையம் அமைக்கும் திட்டம் ஆகியவை தயாராக உள்ளதாகவும், அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும்,'இஸ்ரோ' தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
நான் கொல்லம் டி.கே.எம்., இன்ஜினியரிங் கல்லுாரியில், 'ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' படித்தேன். பின். பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி.,யில் முதுநிலை படிப்பு முடித்தேன். சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நிறைவேறும் வகையில், பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டத்தை, ஐ.ஐ.டி.,யில் பெற்றிருக்கிறேன்.
இங்கு இஸ்ரோ தலைவராக மட்டுமின்றி, ஒரு ஆராய்ச்சி மாணவராக வந்து பட்டம் பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது. செயற்கைக்கோள்களை அனுப்பும் ராக்கெட் ஏவுகலன்களில், எலக்ட்ரானிக்ஸ் பாகங்களில், அதிகப்படியான அதிர்வு இருக்கும். அதனால், பல பிரச்னைகள் இருக்கும்.
எனவே, அந்த அதிர்வுகளை குறைக்கும் வகையில், நான் ஆராய்ச்சி செய்து, இந்த பட்டம் பெற்றுள்ளேன். என் ஆராய்ச்சியில் இருந்த நவீன முறைகளை, என் பதவிக் காலத்தில், இஸ்ரோ ஏவிய ராக்கெட்டுகளில் பயன்படுத்தி, வெற்றி கண்டுள்ளோம்.
இஸ்ரோவின் பல்வேறு அறிவியல் திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயல்பாட்டுக்கு வர உள்ளன. இந்தியா சார்பில், முதன்முதலாக சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இஸ்ரோவின் திட்ட அறிக்கை, அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
அதேபோல், சந்திரயானின் அடுத்த திட்டம் தயாராகி விட்டது. அதுவும் அனுமதி பெற வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. ஆதித்யா செயற்கைக்கோள், சூரியனின் எல் - 1 வட்டப்பாதையில் உள்ளது. அதன் அறிவியல் தரவுகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.