ரயில் பயணிகளை சுட்டு விடுவதாக போதையில் மத்திய போலீசார் மிரட்டல்
ரயில் பயணிகளை சுட்டு விடுவதாக போதையில் மத்திய போலீசார் மிரட்டல்
ரயில் பயணிகளை சுட்டு விடுவதாக போதையில் மத்திய போலீசார் மிரட்டல்
ADDED : ஜூன் 09, 2024 06:00 AM

ஜோலார்பேட்டை: சென்னையிலிருந்து - கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டது. இதில், ரயில் இன்ஜின் முன் பக்கமுள்ள பொதுப்பெட்டியில், கோவை மத்திய ரிசர்வ் போலீசார், 10 பேர் பயணித்தனர்.
அவர்கள் கழிவறைக்கு செல்லும் வழியில் அமர்ந்து மது அருந்தி, பயணிரை கழிவறைக்கு செல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டனர்.
தட்டிக்கேட்டவரை தாக்கிய மத்திய ரிசர்வ் போலீசார், சிலரை துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பயணியர், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றதும் அனைவரும், ரயில் பெட்டியிலிருந்து கீழே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மது போதையில் பயணியரை மிரட்டும், மத்திய ரிசர்வ் போலீசார் பயணம் செய்யும் பெட்டியில், நாங்கள் பயணம் செய்ய மாட்டோம் என கூறினர்.
இதனால் வேறு வழியின்றி, ரயில்வே போலீசார் அதிரடியாக, மத்திய ரிசர்வ் போலீசாரை, ரயிலில் இருந்து இறக்கினர்.
இதையடுத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
அதன் பின் மத்திய ரிசர்வ் போலீசார், அடுத்து வந்த, ஐதராபாத்திலிருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.