விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.59 லட்சம் இழப்பீடு தர இடைக்கால தடை
விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.59 லட்சம் இழப்பீடு தர இடைக்கால தடை
விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.59 லட்சம் இழப்பீடு தர இடைக்கால தடை
ADDED : ஜூலை 06, 2024 07:31 PM
சென்னை:சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு, 59 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வேலுார் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வேலுார் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. ராணுவ வீரரான இவர், 2016 டிச., 2ல் விரிஞ்சிபுரத்தில் இருந்து வடுகந்தாங்கல் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
கணவரின் இறப்புக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, பார்த்தசாரதியின் மனைவி சரஸ்வதி, வேலுார் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் இழப்பீடாக 59 லட்சத்து, 5,656 ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும், என, கடந்தாண்டு ஜூலை 20ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, இன்சூரன்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவில், 'விபத்தின் போது உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார். டாக்டர் அளித்த உடற்கூறு ஆய்வறிக்கையையும், தடய அறிவியல் நிபுணர் அளித்த ஆதாரத்தையும், தீர்ப்பாய நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.
'எனவே, இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீடு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம், ''தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏனெனில், இறந்தவர் மது போதையில் இருந்தார் என்பதற்கான டாக்டரின் சாட்சியம் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டது ஏற்புடையதல்ல,'' என்றார்.
இதையடுத்து, 'டாக்டரின் சாட்சியம் மற்றும் அறிக்கையை பார்க்கும் போது, விபத்தின் போது இறந்தவர் மது போதையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
'மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தடை செய்யப் பட்டுள்ளது. எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, வேலுார் தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.