ஆவின் கொள்முதலை பெருக்க பால் கூட்டுறவு சங்கங்கள் அதிகரிப்பு
ஆவின் கொள்முதலை பெருக்க பால் கூட்டுறவு சங்கங்கள் அதிகரிப்பு
ஆவின் கொள்முதலை பெருக்க பால் கூட்டுறவு சங்கங்கள் அதிகரிப்பு
UPDATED : ஜூலை 25, 2024 04:14 AM
ADDED : ஜூலை 25, 2024 12:33 AM

சென்னை:: ஆவின் பால் கொள்முதலை மேலும் அதிகரிப்பதற்காக, பால் கூட்டுறவு சங்கங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப்பது தொடர்பாக, ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் உள்ளிட்ட அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
பின், அமைச்சர் கூறியதாவது:
ஆவினுக்கு பால் கொள்முதல் செய்ய, 10,000 தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. இருப்பினும், பல கிராமங்களில் சங்கங்கள் இல்லை. அங்கிருந்து பால் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
எங்கெங்கு சங்கங்கள் இல்லை என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அங்கு, புதிய சங்கங்களை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பால் கொள்முதல் 36.5 லட்சம் லிட்டராக அதிகரித்து உள்ளது. பால் கையாளும் திறன் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக, சமீபத்தில் ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடந்தது.
ஏற்றுமதிக்கு கொள்கை திட்டம் வகுத்து, அதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம். பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்துவதற்கு, இப்போது வாய்ப்புகள் இல்லை. ஆவின் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். விற்பனை திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
சென்னை மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், கடந்தாண்டு கன மழையால் பால் சப்ளை பாதிக்கப்பட்டது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் பால் சப்ளையை தடையின்றி தொடர்வதற்கான செயல் திட்டம் தயாரிக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.