துாத்துக்குடியில் கடந்த தேர்தலை விட கனிமொழிக்கு 22414 ஓட்டுகள் குறைவு
துாத்துக்குடியில் கடந்த தேர்தலை விட கனிமொழிக்கு 22414 ஓட்டுகள் குறைவு
துாத்துக்குடியில் கடந்த தேர்தலை விட கனிமொழிக்கு 22414 ஓட்டுகள் குறைவு
ADDED : ஜூன் 06, 2024 02:42 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. துணை பொதுச் செயலர் கனிமொழி 5,40,729 ஓட்டுகள் பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணியைவிட கூடுதலாக 3,92,738 ஓட்டுகளை கனிமொழி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட் இழந்தனர்.
இருப்பினும், 2019 தேர்தலை விட, கனிமொழிக்கு தற்போது 22,414 ஓட்டுகள் குறைவாக கிடைத்துள்ளது தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2019 ல் கனிமொழி 5,63,143 ஓட்டுகள் பெற்றார். பா.ஜ., சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனைவிட 3,47,209 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சட்டசபை தொகுதி வாரியாக பார்க்கும்போது, கடந்த தேர்தலில் விளாத்திகுளத்தில் 79039 ஓட்டுகளும், துாத்துக்குடியில் 1,08,772 ஓட்டுகளும், திருச்செந்துாரில் 99,096 ஓட்டுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 90540 ஓட்டுகளும், ஓட்டப்பிடாரத்தில் 92954 ஓட்டுகளும், கோவில்பட்டியில் 89944 ஓட்டுகளும் பெற்றிருந்தார்.
ஆனால், இந்த முறை விளாத்திகுளத்தில் 80369 ஓட்டுகளும், துாத்துக்குடியில் 1,03,181 ஓட்டுகளும், திருச்செந்துாரில் 100441 ஓட்டுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 81371 ஓட்டுகளும், ஓட்டப்பிடாரத்தில் 85274 ஓட்டுகளும், கோவில்பட்டியில் 87263 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.
கனிமொழிக்கு விளாத்திகுளத்தில் 1330 ஓட்டுகளும், திருச்செந்துாரில் 1345 ஓட்டுகளும் அதிகரித்துள்ளன. ஆனால், துாத்துக்குடியில் 5611 ஓட்டுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 9169 ஓட்டுகளும், ஓட்டப்பிடாரத்தில் 7680 ஓட்டுகளும், கோவில்பட்டியில் 2681 ஓட்டுகளும் குறைந்துள்ளன.
இதுகுறித்து தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
துாத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கும், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் பா.ஜ., கூட்டணி கட்சியான த.மா.கா.,வுக்கும் ஓட்டுகள் பிரிந்துள்ளன. அவை அ.ம.மு.க., ஓட்டுகள். மேலும், 2019 தேர்தலில் மொத்தம் உள்ள 14,25,401 ஓட்டுகளில் 9,91,986 ஓட்டுகள் பதிவாகின.
தற்போது, 14,58,430 ஓட்டுகளில் 9,75,468 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியது. ஓட்டு பதிவு சதவிகிதம் குறைந்ததும் தி.மு.க.வுக்கான ஓட்டுகள் குறைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.