நிதி பற்றாக்குறையை சமாளித்தது எப்படி?
நிதி பற்றாக்குறையை சமாளித்தது எப்படி?
நிதி பற்றாக்குறையை சமாளித்தது எப்படி?

சென்னை:''நிதி நிலைமையை சரியாக கையாண்டதால், கடந்த ஆண்டில் எதிர்பார்த்ததை விட, 3,000 கோடி ரூபாய் குறைவாக கடன் வாங்கப்பட்டுள்ளது; வரும் நிதியாண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்படும்,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை, ஏழு கோடி. தற்போது, எட்டு கோடியை தாண்டியிருக்கும். இது, ஜெர்மனி நாட்டின் மக்கள் தொகைக்கு இணையானது. பரப்பளவை பார்த்தால் கிரீஸ் நாட்டிற்கு இணையானது.
குறைந்த கடன்
பொருளாதார அளவை பார்த்தால் பின்லாந்துக்கும்; மக்களின் வாங்கும் திறனை பார்த்தால், நெதர்லாந்துக்கும் இணையாக தமிழகம் உள்ளது.
நம் நாட்டை எடுத்துக் கொண்டால், 6 சதவீத மக்கள் தொகை, 4 சதவீத பரப்பை தமிழகம் கொண்டுள்ளது.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு, 9 சதவீதம். தமிழக பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
மாநில பொருளாதாரத்தில், 28 சதவீதம் கடன் வாங்க, நிதிக்குழு அனுமதி அளித்துள்ளது. தமிழக கடன் அளவு, 26 சதவீதம் தான் உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய பல நலத்திட்ட உதவிகள் வராமலே, வருவாய் பற்றாக்குறையை குறைத்திருக்கிறோம். 'டிஜிட்டல்' பொருளாதாரம், டிஜிட்டல் சேவைகளில் வரி வருவாய் வசூலிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
பல சலுகைகள்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில், தகுதி வாய்ந்த பயனாளிகள் விடுபட்டிருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும். புதிதாக சேர்க்கப்படும் பயனாளிகளுக்கு கூடுதல் நிதி உடனுக்குடன் வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பள கணக்கு வைத்துள்ள வங்கிகள் வாயிலாக, காப்பீட்டு திட்டம் துவக்கப்படும். ஆண்டுக்கு, 200 - 250 ஊழியர்கள் விபத்திலும், 2,000 பேர் இயற்கை மரணத்தால் உயிரிழக்கின்றனர்.
காப்பீட்டு திட்டத்தால், விபத்தில் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும். திருமண வயதில் பெண்கள் இருந்தால் நிதியுதவி, உயர் கல்வி படிக்க நிதியுதவி என, பல சலுகைகள் வழங்கப்படும்.
மத்திய அரசிடம் இருந்து கல்வி துறைக்கு, 2,152 கோடி ரூபாய், ஜல்ஜீவன் மிஷன் போன்றவற்றுக்கு நிதி வர வேண்டும். அவர்கள், செலவுக்கு ஏற்ப வழங்குகின்றனர். முதல் தவணை வருகிறது. செலவு செய்த பின் தர வேண்டும் என்ற விதியை பின்பற்றுகின்றனர்; இதில் தவறில்லை.
கிடைக்கும் என்று நினைத்த தொகை வரவில்லை. சில ஆயிரம் கோடி ரூபாய் எதிர்பார்த்ததை விட குறைவாக வருகிறது. அது வந்திருந்தால், வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும்.
சரியான மேலாண்மை
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு, 41 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று, நிதிக்குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நிதி மேலாண்மை சிறப்பாக கையாளப்படுகிறது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், தமிழக அரசு பல்வேறு துறைகளுக்கு விடுவிக்கப்பட்ட நிதியில், 11,000 கோடி ரூபாய் செலவிடப்படாமல் இருந்தது.
அதை எடுத்து, அவசிய பணிகளுக்கு செலவிடப்பட்டது. இந்த மாதிரி நிதி மேலாண்மை சரியாக செய்திருந்ததால், கடந்த ஆண்டில் எதிர்பார்த்தை விட, 3,000 கோடி ரூபாய் குறைவாக கடன் வாங்கப்பட்டது.
வரும் நிதியாண்டில், 7,000 கோடி ரூபாய் குறைவாக கடன் வாங்கப்படும். அந்த நிதியாண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, குறைவதற்கு வாய்ப்புள்ளது. 'டாஸ்மாக்' வாயிலாக வரக்கூடிய வருவாய், 8 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.