Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மெத்தனால் வந்தது எப்படி? விருத்தாசலத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருத்தாசலத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருத்தாசலத்தில் விசாரணை

மெத்தனால் வந்தது எப்படி? விருத்தாசலத்தில் விசாரணை

UPDATED : ஜூன் 23, 2024 06:53 AMADDED : ஜூன் 23, 2024 06:08 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான மெத்தனால் சப்ளை குறித்து, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் சாராயத்தை குடித்து, 55 பேர் இறந்துள்ளனர்; 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு காரணமான மெத்தனால், புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.

தொடர்ந்து, புதுச்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாதேஷ், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆன்லைனில், 'மெத்தில் டெர்மைட்' என்ற வேதிப்பொருள் அடங்கிய, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 பேரல்களை, விருத்தாசலம் செராமிக் நிறுவனத்தின் பெயரில் பெற்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு, விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்த ஊழியர் ஆகிய இருவரை பிடித்தனர். மூலப்பொருட்கள் வாங்கிய ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும், அங்கிருந்த எம்.டி.ஓ., எனும் மினரல் தின்னர் ஆயில் மற்றும் ஓலிக் ஆயில் எனும் ஓலிக் ஆசிட் அடங்கிய இரண்டு பேரல்களை பறிமுதல் செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செராமிக் நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், 'மினரல் தின்னர் ஆயில் மற்றும் ஓலிக் ஆயில் ஆகியவை பீங்கான் பொருட்கள் தயாரிப்பு பணிக்கு பயன்படுத்தக் கூடியவை. 1 லிட்டர் எம்.டி.ஓ.,வுக்கு 100 மி.லி., ஓலிக் ஆயில் சேர்த்து பயன்படுத்தப்படும்.

'இவை, அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகளை உற்பத்தி செய்யும்போது, மோல்டுடன் ஒட்டாத வகையில் இவ்விரு ஆயிலும் சேர்த்து பயன்படுத்தப்படும். இங்கு மெத்தனால் பயன்பாடு கிடையாது. கள்ளச்சாராய பலி தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்' என்றனர்.

வியாபாரிகள் மீது கொலை வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 55; வீராசாமி, 40; வீரமுத்து, 33. இவர்கள், கடந்த 18ம் தேதி அதே பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். அவர்களில் கண்ணன் 19ம் தேதியும், வீராசாமி 20ம் தேதியும் அவரவர் வீடுகளில் இறந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் வீரமுத்து இறந்தார். கண்ணன் மகன் மணிகண்டன் புகாரின்படி, கச்சிராயபாளையம் போலீசார், உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நச்சுப்பொருள் என தெரிந்தும் விற்பனை செய்தல், கொலை வழக்கு, விஷ நெடியுடன் கூடிய சாராயத்தை பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, மாதவச்சேரி ராமர், 36; சேஷசமுத்திரம் சின்னதுரை, 36; விரியூர் ஜோசப்ராஜா, 35, ஆகியோரை கைது செய்துள்ளனர்.



தெரிவிக்கலாம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, அரசு அலுவலகங்களில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் என, 90807 31320 என்ற மொபைல் எண்ணுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. விருத்தாசலம் ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us