இலங்கை கடற்படை விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு
இலங்கை கடற்படை விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு
இலங்கை கடற்படை விவகாரத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு
ADDED : ஜூலை 18, 2024 09:26 PM
மதுரை:'இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மத்திய அரசு மீட்கும் என நம்பிக்கை உள்ளது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்கின்றனர்; படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தற்போது கைது செய்யப்பட்ட 26 தமிழக மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடம் இருந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீட்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி. அருள்முருகன்:
மனுதாரரின் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இது, இந்தியா - இலங்கை என இரு நாட்டு பிரச்னை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் தமிழக மீனவர்களின் வாழ்வதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கும் எனவும், விரைவில் மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த நீதிமன்றம் நம்புகிறது.
மனுதாரர் கோரும் கோரிக்கைகளை, இந்த நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.