சிறுநீரக தானம் செய்ய பெண்ணை வற்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுநீரக தானம் செய்ய பெண்ணை வற்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிறுநீரக தானம் செய்ய பெண்ணை வற்புறுத்திய எஸ்.ஐ., மீது நடவடிக்கை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 01:01 AM
சென்னை:சட்ட விரோதமாக உறுப்பு தானம் செய்ய பெண்ணை வற்புறுத்திய, வேலுார் எஸ்.ஐ., மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரிக்கும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்தது.
வேலுாரை சேர்ந்த நடராஜன் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 'என் மனைவி செல்வகுமாரி, வேலுார் கே.வி.குப்பம் போலீஸ் எஸ்.ஐ., சத்தியா என்ற சத்தியநாராயணன் கட்டுப்பாட்டில் உள்ளார். எஸ்.ஐ.,க்கு சிறுநீரக பிரச்னை இருப்பதால், என் மனைவியிடம் சிறுநீரகத்தை தானமாக கேட்டு, அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.
இது தொடர்பாக, நான் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக, எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் இருக்கும் என் மனைவியை மீட்டு தரும்படி, வேலுார் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று, கோரியிருந்தார்.
இந்த மனு, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் மனைவியிடம் சிறுநீரகத்தை தானமாக கேட்ட சப் - இன்ஸ்பெக்டர், அவரை மனமாற்றம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அளித்த புகார் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மிக தீவிரமான குற்றச்சாட்டை, போலீசார் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை' என்றார்.
இதையடுத்து, செல்வகுமாரியின் மகள் மீனாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, 'சிறுநீரகம் தானமாக கேட்டு, பல பெண்களை எஸ்.ஐ., வற்புறுத்திஉள்ளார். பாதிக்கப்பட்ட நபர்களில், என் தாய் ஐந்தாவது நபர். என் தாயை என்னுடன் அழைத்து செல்ல தயாராக உள்ளேன்' என்று, நீதிபதிகளிடம் மீனா தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாதிக்கப்பட்ட பெண் தன் மகளுடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தன் மகளுடன் செல்லலாம். பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளிடம் விசாரித்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., மீது வேலுார் மாவட்ட எஸ்.பி., துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரிக்க, சிறப்பு பிரிவை அமைத்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை இரண்டு வாரங்களில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் சாட்சிகளை, போலீசார் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வரும் 11க்கு தள்ளி வைத்தனர்.