டெல்டா மாவட்டங்களில் கனமழை; கொள்முதல் நெல் மூட்டைகள் சேதம்
டெல்டா மாவட்டங்களில் கனமழை; கொள்முதல் நெல் மூட்டைகள் சேதம்
டெல்டா மாவட்டங்களில் கனமழை; கொள்முதல் நெல் மூட்டைகள் சேதம்

டெல்டா மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகின.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதில், நாகை, கடலுார், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகின.

நாகை மாவட்டத்தில், 1 லட்சத்து 62,500 ஏக்கரில் சம்பா, 3,500 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இதில், 176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, 1 லட்சத்து, 79,348 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க கோவில்பத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கும், அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு ரயில்களிலும் உடனுக்குடன் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது.
ஆனால், மூட்டைகள் தேக்கத்தால் பல நிலையங்களில், 10 நாட்களுக்கு முன்பாகவே கொள்முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாகையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க, தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், வாழ்குடி, பில்லாளி, மேல பூதனுார், திருமருகல் போன்ற நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் மலை போல குவித்து வைக்கப்பட்ட, 30,000 டன் நெல் மூட்டைகள் நேற்றைய மழையில் நனைந்து நாசமாகின.
கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறுகையில், 'திறந்த வெளியில் கிடக்கும் மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரிகளை அனுப்புமாறு பல நாட்களாகவே முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினோம்.
'கண்காணிப்பு அலுவலர்களிடமும் வலியுறுத்தினோம். நடவடிக்கை இல்லாததால் கொள்முதலை நிறுத்தினோம்.
'கன மழையால் நெல் மூட்டைகள் நனைந்து ஏற்படும் இழப்பை அரசே ஏற்க வேண்டும். மாறாக பட்டியல் எழுத்தர்களை இழப்பை ஏற்க வற்புறுத்தக் கூடாது' என்றனர்.
இதே போல, கடலுார், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால், நேரடி கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
-- நமது நிருபர் குழு -