பொதுக்குழு பேச்சு; முதல்வர் அதிருப்தி அவசர விளக்கம் அளித்து சமாளிப்பு
பொதுக்குழு பேச்சு; முதல்வர் அதிருப்தி அவசர விளக்கம் அளித்து சமாளிப்பு
பொதுக்குழு பேச்சு; முதல்வர் அதிருப்தி அவசர விளக்கம் அளித்து சமாளிப்பு
ADDED : ஜூன் 13, 2024 01:49 AM
சென்னை:கூட்டணி தொடர்பாக, கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் பேசிய விவகாரம், முதல்வர் ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்து உள்ளது.
அதையடுத்து, 'தி.மு.க.,வை விமர்சிக்கவில்லை; தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி எக்கு கோட்டை' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று விளக்கம் அளித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துஉள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், செல்வப்பெருந்தகை பேசுகையில், 'தி.மு.க.,வை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால், தோழமை என்பது வேறு. சார்ந்திருத்தல் என்பது வேறு. எத்தனை நாட்களுக்கு நாம் சார்ந்திருக்க போகிறோம்' என்றார்.
கோஷ்டி தலைவர்கள் சிலர் பேசுகையில், 'தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தனித்து செயல்பட வேண்டும்' என, வலியுறுத்தினர். இதற்கு கார்த்தி சிதம்பரமும் ஆதரவு அளித்துஉள்ளார்.
இது, உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து, பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. கோஷ்டி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு, முதல்வர் ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசியிருக்கலாம்; வரும் சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெறும்,'' என்றார்.
சென்னை தலைமை செயலகத்தில், விளவங்கோடு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின், செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலினிடம், பொதுக்குழுவில் கட்சியை பலப்படுத்துவதற்காக பேசப்பட்ட பேச்சு என்றும், தி.மு.க., கூட்டணி பற்றி விமர்சித்து பேசவில்லை என்றும், காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கட்சியை வலுப்படுத்த நமக்கு கிடைத்த கருத்தியல் தான், காமராஜர் ஆட்சி என குறிப்பிட்டேன். இன்று இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி என்கிற கனவு மெய்ப்பட வேண்டும் என்றால், அதற்கான உழைப்பை செலுத்தி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என பேசினேன்.
எனக்கு பின்னால் பேசியவர்கள் கூறிய சில கருத்துக்கள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல.
கடந்த 2003ல் துவங்கிய தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, எக்கு கோட்டை போல் இருக்கிறது. இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த, எவர் முயற்சி செய்தாலும், அது நிச்சயம் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.