தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
ADDED : மார் 12, 2025 12:43 PM
சென்னை: 'நீங்கள் தவறான தகவல்களை பரப்புவதால், உண்மைகள் மாறப்போவதில்லை' என, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதில் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் வெற்றிகரமான கல்வி மாதிரியின் தரத்தை, தேசிய கல்வி கொள்கை குறைப்பதாக உள்ளதால், தமிழகம் அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் 15ல் நாங்கள் எழுதிய கடிதம், புதிய கல்வி கொள்கையை அங்கீகரிப்பதாக இல்லை. எங்களின் நிலைப்பாட்டில், எந்தவித திடீர் மாற்றமும் ஏற்படவில்லை. மத்திய அரசின் எந்த திட்டத்தையும், நாங்கள் குருட்டுத்தனமாக ஏற்பதில்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை, மத்திய அரசு அமல்படுத்தினால், தமிழக அரசு அவற்றை ஏற்று செயல்படுத்துகிறது.
பிஎம் ஸ்ரீ குறித்து முடிவெடுக்க, ஒரு குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில், அதை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என்று தான், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக விளக்கி இருந்தோம். உங்களின் தவறான தகவல்களால், உண்மைகள் என்றும் மாறாது.
தமிழகத்தின் கல்வி மாதிரி, எல்லாவற்றுக்கும் முன் மாதிரியானது. அது, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனுடன் உள்ளது. இதில், நாங்கள் அரசியல் செய்யவில்லை. புதிய கல்வி கொள்கையை, வலுக்கட்டாயமாக தமிழகத்தில் திணித்து, இங்குள்ள கல்வியின் மரபையும், கலாசாரத்தையும் சிதைக்க நினைப்பது தான் அரசியல்.
நாட்டின் பன்முகத்தன்மையே அதன் பலம் என்பதை அறிந்து, நீங்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழக மாணவர்களின் எதிர்காலத்துக்கு எது சிறந்தது என்பதை, நாங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து, அதை ஆதரித்தால், நீங்கள் தான் எங்கள் மாணவர்களுக்கு சிறந்த சேவையை செய்தவராவீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.