2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெல்வதை பொறுத்திருந்து பாருங்கள்: முனுசாமி
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெல்வதை பொறுத்திருந்து பாருங்கள்: முனுசாமி
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெல்வதை பொறுத்திருந்து பாருங்கள்: முனுசாமி
ADDED : ஜூன் 06, 2024 07:02 PM
கிருஷ்ணகிரி:''2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., எப்படி வெல்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்,'' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க.,வுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார், ஒன்றிணைவோம் வா' என கூறியுள்ளார். அ.தி.மு.க.,தொண்டர்களை அவர் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர். இவருக்கு அ.தி.மு.க., பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி கை கோர்த்துள்ளார் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசி யாரும் அவர் பக்கத்தில் கூட அமர மாட்டார்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு அருகதை இல்லாதவர் பன்னீர் செல்வம். ஜெயலலிதாவிற்கு பணி செய்ய வந்தவர் சசிகலா. அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து, 24 மணி நேரமாகியும், யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தும், 18 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது.
ஆனால், 2024ல், தே.மு.தி.க.,வோடு மட்டும் கூட்டணி வைத்த நிலையில், 20.46 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. தி.மு.க., 2019ல், 33.25 சதவீத ஓட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது, 26.93 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த, 1998ல், தென்னிந்தியாவிலேயே, பா.ஜ., இல்லாதபோது ஜெயலலிதா, பா.ஜ.,வை அறிமுகம் செய்து கூட்டணியில் சேர்த்து, அப்போது வாஜ்பாயை பிரதமராக்கினார். ஆனால், அவர்கள் தமிழக உரிமையான காவிரி விவகாரத்தை கண்டுகொள்ளாததால், 13 மாதத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த உரிமை பெற்று தந்தார். அதனால் தான் பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது.
தி.மு.க., பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து போட்டியிட்டு, பணபலம், அதிகாரபலம் உள்ளிடவைகளை வைத்து வென்றுள்ளது. அ.தி.மு.க.,வோ கூட்டணி பலமின்றி அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளது. பா.ஜ., நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக அண்ணாமலை பொய் சொல்கிறார்.
அவர்கள் தொகுதியில் விசாரித்தால், ஓட்டுக்காக யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்; தேர்தலுக்காக எவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தார்கள் என்பது தெரியும். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கட்டாயம் பெரு வெற்றி பெறும். அது எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு கூறினார்.