Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி படுகொலை உறவினரே படுபாதகம்; திருப்பூர் அருகே மற்றொரு பயங்கரம்

தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி படுகொலை உறவினரே படுபாதகம்; திருப்பூர் அருகே மற்றொரு பயங்கரம்

தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி படுகொலை உறவினரே படுபாதகம்; திருப்பூர் அருகே மற்றொரு பயங்கரம்

தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி படுகொலை உறவினரே படுபாதகம்; திருப்பூர் அருகே மற்றொரு பயங்கரம்

ADDED : மார் 14, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
அவிநாசி:அவிநாசி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்துாரில் உள்ள வரத்தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 84. இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். வேலுசாமி என்ற மகன் உள்ளார்.

சந்தேகம்


பின், இரண்டாவதாக பர்வதம் என்பவரை திருமணம் செய்து, கலைமணி, காந்திமதி என, இரு மகள்கள் உள்ளனர். மகன், மகள்களுக்கு திருமணமாகி திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்றனர்.

தோட்டத்து வீட்டில் பழனிசாமி, பர்வதம், 78, இருவர் மட்டும் வசித்தனர். இருவரும் நேற்று காலை பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக, அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்த டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் கூறியதாவது:

இரட்டைக் கொலை நடந்த வீட்டில், நகை, பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனால், வேறு காரணங்கள் குறித்து விசாரித்ததில், பழனிசாமி தோட்டத்துக்கு அருகிலேயே, அவரது தம்பி முறையான ரமேஷ், 45, மீது சந்தேகம் வந்தது.

தகராறு


மதுவுக்கு அடிமையான அவர், திருப்பூர் பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளார். ரமேஷ் வளர்க்கும் நாய்கள், கோழி, ஆடுகள் அடிக்கடி வேலி தாண்டி பழனிசாமி தோட்டத்து பகுதிக்குச் சென்று, வாழை உள்ளிட்ட செடிகளை சேதம் செய்து வந்துள்ளன.

தவிர, எட்டு நாய்களை ரமேஷ் வளர்ப்பதால், இரவில் துாங்க முடிவதில்லை என பர்வதம், ரமேஷிடம் அடிக்கடி சத்தம் போட்டு உள்ளார்.

இதனால், பல மாதங்களாகவே தம்பதிக்கும், ரமேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையும் சண்டை நடந்துள்ளது.

விசாரணை


இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், இரவு மதுபோதையில் பர்வதத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். அவர் சத்தம் போடவே, வீட்டுக்கு வெளியில் துாங்கிக் கொண்டிருந்த பழனிசாமி எழுந்துவர, அவரையும் வெட்டி உள்ளார். சில நிமிடத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

அதன்பின், ரமேஷ் தன் வீட்டுக்குச் சென்று எதுவும் நடக்காதது போல் துாங்கி உள்ளார். நேற்று காலை, பைபாஸ் ரோட்டில் மொபட்டில் சென்ற போது வேன் மோதியதில், ரமேஷ் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு கூறினர்.

மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், ரத்தக்கறை படிந்த உடைகளை ரமேஷ் வீட்டில் மோப்ப நாய் கண்டுபிடித்தது.

அவற்றை கைப்பற்றிய போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

வெற்று விளம்பரங்களால், மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது. சர்வாதிகாரி என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டால் மட்டுமே, சட்டம் - ஒழுங்கை சீர் செய்து விட முடியாது. இரும்புக்கரம் என்று வாய் கிழிய வீரவசனம் பேசினால் மட்டும், தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது.

மீதமுள்ள ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்தி, மக்களின் பாதுகாப்பை முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும்.



- பழனிசாமி,

அ.தி.மு.க., பொதுச்செயலர்

வாய் கிழிய வீரவசனம்



கடந்த நவம்பரில் இதே பகுதியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கடந்த, 2023ல் பல்லடத்தில், இதே போன்று வீட்டில் புகுந்து, ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. தொடர்ந்து, இதே பகுதியில் தனியாக வசிப்போர், கொலை செய்யப்பட்டு வருகின்றனர். மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. காவல் துறைக்கு பொறுப்பான முதல்வரோ, கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்

என்ன செய்கிறது அரசு?



திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுதும் தனியாக வசித்து வரும் முதியோர் படுகொலை செய்யப்படுவதும், அவர்களின் வீடுகளில் இருந்து பணம், நகை கொள்ளையடிப்பதும் தொடர்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை களைய வேண்டிய, காவல் துறையை, முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேவையற்ற பிரச்னையை கிளப்பி, மக்களை திசை திருப்புவதில் கவனம் செலுத்துவதே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாக உள்ளது.

- தினகரன்,

அ.ம.மு.க., பொதுச்செயலர்

திசை திருப்புவதில் கவனம்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us