கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ரூ.4 கோடி வர்த்தகம் பாதிப்பு
கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ரூ.4 கோடி வர்த்தகம் பாதிப்பு
கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் ரூ.4 கோடி வர்த்தகம் பாதிப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:37 AM

ஒட்டன்சத்திரம்: இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வராததால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட்டில் நேற்று ரூ.4 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு சுற்றுப்புறகிராமப் பகுதியில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
இங்கு விற்பனையாகும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கேரளாவில் விடுமுறை என்றால் அதற்கு முதல் நாள் அம்மாநில வியாபாரிகள் காய்கறிகளை வாங்க வர மாட்டார்கள். இதனால் ஒட்டன்சத்திரத்தில் காய்கறி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும்.
கேரளாவில் பக்ரீத் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று அம்மாநில வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வரவில்லை. இது குறித்து விவசாயிகளுக்கு முன்னரே தெரியப்படுத்தியதால் அவர்கள் காய்கறிகளை பறித்துக் கொண்டு வரவில்லை. இருந்தபோதிலும் ஒரு சில விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்தனர். மார்க்கெட்டில் 30 சதவீத காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
இதனால் ஞாயிறன்று மும்முரமாக செயல்படும் காய்கறி மார்க்கெட் நேற்று களையிழந்து காணப்பட்டது.
தமிழக வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.
மார்க்கெட் சங்கச் செயலாளர், ராசியப்பன் கூறுகையில் 'கேரள வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய வராததால் காய்கறி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ரூ.4 கோடி அளவிற்கு வர்த்தகம் நடக்கவில்லை. நாளை முதல் மார்க்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றார்.