Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி

ADDED : ஜூன் 09, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
கோவை : 'புதிய பாரதத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள்' என்ற, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு கோவையில் நேற்று துவங்கியது.

அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக் ஷிக் மஹாசங் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, தமிழக கவர்னர் ரவி துவக்கி வைத்தார். இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள், பாரம்பரிய கலாசார கல்வி முறை குறித்துப் பேசினர். கருத்தரங்கில், கவர்னர் ரவி பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில், 'ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், ஜெனரேட்டிவ் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், குவான்டம் கம்பியூடேஷன்' என உலக அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் அபரிமிதமாக உள்ளது.

இந்த சூழலை நாம் எதிர்கொள்ள, அறிவுசார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியம். அந்த அறிவுசார்ந்த வளர்ச்சிக்கு, தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.

நம் பாரதம், 200 ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே தலைசிறந்த நாடாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின், உலகப் பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில் பாரதம் இருந்தது. 2014ல் 11வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது, ஐந்தாவது இடத்தில் உள்ளோம்.

காலனியாதிக்கம்


ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், காலனி நாடுகளின் ஆதிக்கம் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ளது.

இதை மாற்றும் வகையில், தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

புதிய பாரதத்தை உருவாக்க, கல்வியில் சீர்திருத்தம் தேவை. இதில், பல்வேறு துறைகளின் வளர்ச்சி மட்டுமல்லாமல், பாரதத்தின் பாரம்பரியமிக்க கலாசாரம் அதன் ஆன்மாவாக உள்ளது.

வரும் சில ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்க வேண்டும். அதற்கு தரமான கல்வியும், இளைஞர்களின் பங்களிப்பும் அவசியமானதாகும்.

நம் பாரதம், அறிவு சார்ந்த புண்ணிய பூமி. நம் பாரதத்தில் தான் உலகத்தில் உள்ள அனைத்தும் ஒரே குடும்பம் என பார்க்கும் அறிவும், சிந்தனையும் உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர், வாசுதேவ குடும்பகம் ஆகிய தத்துவங்கள் முனிவர்கள் நமக்கு வழங்கிய அறிவாகும்.

மத்திய கல்வித் துறை, 'பாரதிய நாலேட்ஜ் சிஸ்டம்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முன், மிகக் குறைந்த அளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே நாட்டில் இருந்தன.

தற்போது ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3டி தொழில்நுட்பத்தில் விண்கலங்களை உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்பி பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழக பாடத்திட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த பாடங்கள் தவிர்க்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உள்ளன.

மாறாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மற்றும் திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே அதிகமாக உள்ளன.

குறிப்பாக, வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி, சிவகங்கையில் மருது சகோதரர்கள் நினைவு தினம், முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதில்லை. அவர்களது நினைவு தினங்களை நினைவுகூர்ந்து நாம் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பாஸ்கர், யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி, முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர் குமாரசாமி, அகில பாரதிய ராஷ்டிரிய சாக் ஷிக் மஹாசங் செயலர் லட்சுமண், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரிச் செயலர் வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'தடையாக உள்ள மார்க்சிய சிந்தனைகள்'

“இன்றைய காலகட்டத்தில், கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு தடையாக மார்க்சிய சிந்தனை உள்ளிட்டவை உள்ளன. அவற்றைத் தகர்த்து, பாரம்பரியமிக்க நம் கலாசாரத்தின் கல்வியை கொண்டு சேர்க்க, கல்வியாளர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். புதிய பாரதம் வலிமையான அறிவையும், வேதாந்த பலத்தையும் கொண்டதாக அமைய வேண்டும்,” என்றார் கவர்னர் ரவி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us