எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல்
எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல்
எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு வரைவு குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஜூன் 12, 2024 12:44 AM
சென்னை:எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கில், குற்றவாளிகள் மீது வரைவு குற்றப் பத்திரிகையை, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ.,அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை செக் போஸ்டில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன், 55, கடந்த 2020 ஜன., 8ல், மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்கு பதிந்து, அப்துல் சமீம், 30, தவ்பிக், 27, காஜா முகைதீன், 53, மெகபூப் பாஷா,48, இஜாஸ் பாஷா, 46, ஜாபர் அலி, 26, சிகாபுதின், 35, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், குற்றவாளிகள் மீதான ஆதாரங்கள் அடங்கிய வரைவு குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன் நேற்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக, டில்லி சிறையில் இருந்து காஜா முகைதீனும், சேலம் மற்றும் பெங்களூரு சிறைகளில் இருந்து மற்ற குற்றவாளிகளும் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அதே சிறையில் அடைக்கப்பட்டனர்.