தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு
தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு
தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு
ADDED : ஜூன் 25, 2024 01:44 AM

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், 72; தி.மு.க., முன்னாள் மத்திய, மாநில அமைச்சர். கட்சியின் துணை பொது செயலராக இருந்தவர். பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவருக்கு சொந்தமான, 25 ஏக்கர் பண்ணை வீடு, மொடக்குறிச்சி அருகே புன்செய் காளமங்கலம், சின்னம்மாபுரம் மினி காட்டில் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுப்புலட்சுமி இங்கு செல்வது வழக்கம். சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், இந்த பண்ணை வீட்டை கவனித்து வருகிறார். பண்ணை வீட்டின் முன் கதவு தாழ்ப்பாள் நேற்று காலை உடைந்து கிடந்தது. மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, வீட்டுக்குள் இரும்பு டேபிள் டிராயரில் வைக்கப்பட்டிருருந்த, 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. மேலும், அலுவலக அறை, படுக்கை அறை கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளதா எனவும் திருட்டு கும்பல் தேடியுள்ளது. பண்ணை வீட்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை. ஆட்கள் நடமாட்டமும் இல்லை என்பது தெரிந்து, திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.