விவசாய மின் இணைப்பு திட்டம் முடக்கம் அரசு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
விவசாய மின் இணைப்பு திட்டம் முடக்கம் அரசு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
விவசாய மின் இணைப்பு திட்டம் முடக்கம் அரசு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
ADDED : ஜூலை 06, 2024 07:29 PM
உடுமலை:தமிழகம் முழுதும் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், இணையதள பதிவு முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், இலவச பதிவு, 25,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் உடனடி மின் இணைப்பு திட்டமாக, மின் பளுவை பொருத்து, 2.50 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலுத்தி, 'தட்கல்' முறையில், மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களில், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021ல், தி.மு.க., அரசு பதவி ஏற்றதும், ஆண்டுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தது. இது, 2022ல், 50,000 ஆக குறைந்த நிலையில், கடந்தாண்டு 35,000 வரை மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டது.
நடப்பாண்டு மின் இணைப்பு குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகளும், அதிகாரிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், மின் இணைப்புகளுக்கு பதிவு செய்யும் இணையதளம், ஏப்., 1 முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மின் இணைப்பு பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, தலைமை செயலர் வாயிலாக மின் வாரியத்திற்கு உத்தரவு வரும். அதன் அடிப்படையில் வழங்கப்பட்டது. நடப்பாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமானது. அடுத்து துவங்கிய சட்டசபை கூட்டத்தொடரிலும் அறிவிப்பு வெளியாகாத நிலையில், நான்கு மாதமாக, விவசாய மின் இணைப்பு பதிவு மற்றும் இணைப்பு வழங்கும் பணி முடங்கியுள்ளது.
ஒருவேளை நடப்பாண்டு திட்டத்தை முடக்கி, 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மொத்தமாக மின் இணைப்பு வழங்க ஆளுங்கட்சி முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் உறுதியான தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.