பன்றி தலை, காவி உடையுடன் தியானம்: நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
பன்றி தலை, காவி உடையுடன் தியானம்: நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
பன்றி தலை, காவி உடையுடன் தியானம்: நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
UPDATED : ஜூன் 03, 2024 02:49 PM
ADDED : ஜூன் 03, 2024 06:30 AM

சென்னை : ''அரசியல் அழுத்தம் காரணமாக, பிரதமர் மோடியை அவதுாறாக சித்தரித்து படம் வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்,'' என, பா.ஜ., சமூக ஊடகப் பிரிவு துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் கூறினார்.
அவர் கூறியதாவது: பத்திரிகையாளர் என்ற போர்வையில் வலம் வரும், 'வலைப்பேச்சு பிஸ்மி' என, அழைக்கப்படும் நபர், யூடியூப் சேனல் வைத்துள்ளார். இவர் சமூக வலைதளமான, 'எக்ஸ்' தளத்தில், பன்றி தலையுடன் காவி உடை அணிந்த ஒருவர் தியானம் செய்வது போல, பிரதமர் மோடி குறித்து மிகவும் கேவலமாக சித்தரித்து படம் வெளியிட்டுள்ளார்.
அதேபோல, மற்றொரு படத்தையும் அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட, 66 இடங்களில் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகாரை பெற்றுக்கொள்ளும் போலீசார், 'ஓ... பிரதமரையே அருவருப்பாக சித்தரித்து வெளியிட்டுள்ளாரா; அதற்கான லிங்க் அனுப்புங்கள்.
'உங்கள் புகார் குறித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்கிறோம்' என்கின்றனர்.
அரசியல் அழுத்தம் காரணமாக, போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால், வலைப்பேச்சு பிஸ்மி போன்றோர் மீது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கின்றனர்.
எங்கள் புகார் மீது, சி.எஸ்.ஆர்., எனும் மனு ஏற்பு ரசீதுவோ, எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்து கொடுக்கவில்லை. போலீசார் இதேபோல தொடர்ந்து செயல்பட்டால், என்ன செய்வது என, தலைமையிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.