ஆளுங்கட்சி அத்துமீறல்களுக்கு துணை போகும் கலெக்டர், எஸ்.பி., நாம் தமிழர் கட்சி புகார் மனு
ஆளுங்கட்சி அத்துமீறல்களுக்கு துணை போகும் கலெக்டர், எஸ்.பி., நாம் தமிழர் கட்சி புகார் மனு
ஆளுங்கட்சி அத்துமீறல்களுக்கு துணை போகும் கலெக்டர், எஸ்.பி., நாம் தமிழர் கட்சி புகார் மனு
ADDED : ஜூலை 04, 2024 11:35 PM
சென்னை:'விழுப்புரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி சார்பில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலர் சங்கர் அளித்துள்ள மனு:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தி.மு.க., தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 25 மாவட்டச் செயலர்கள் தொகுதியில் தங்கி, பொதுமக்களை ஆடு, மாடுகளைப் போல், கோவில் மற்றும் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கின்றனர்.
மாலை அவர்களை விடுவிக்கும்போது, 300 ரூபாய் பணம், இரவு உணவு கொடுத்து அனுப்புகின்றனர். மாற்று கட்சியினர், அவர்களிடம் ஓட்டு கேட்கும் வாய்ப்பை தடுக்கின்றனர். இதை தட்டிக் கேட்ட நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா மற்றும் நிர்வாகிகளை, குண்டர்கள் வாயிலாக மிரட்டுகின்றனர்.
மேலும், வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, மூக்குத்தி மற்றும் பரிசுப் பொருட்களை வினியோகம் செய்கின்றனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அத்துமீறல்களை காவல் துறை வேடிக்கை பார்ப்பதுடன், அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுகிறது. வரும் நாட்களில் தொகுதி முழுதும், ஓட்டுக்கு பணம் கொடுக்க தயாராகி வருகின்றனர்.
அனைத்து விதிமீறல்களுக்கும் துணை போகும் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை இடமாற்றம் செய்ய வேண்டும். அங்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
தொகுதியில் அனுமதி யின்றி செயல்படும், தி.மு.க., தேர்தல் பணிமனைகள் அகற்றப்பட வேண்டும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.