ரூ.3191 கோடி கடனை வசூலிக்க கூட்டுறவு சங்கங்கள் புதிய வழி
ரூ.3191 கோடி கடனை வசூலிக்க கூட்டுறவு சங்கங்கள் புதிய வழி
ரூ.3191 கோடி கடனை வசூலிக்க கூட்டுறவு சங்கங்கள் புதிய வழி
ADDED : ஜூலை 05, 2024 02:31 AM
சென்னை:கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய உறுப்பினர்களின் கணக்குகளில், நிலுவையில் உள்ள தொகையை சீரமைத்து, மத்திய கால கடனாக மாற்றும் பணிகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில், 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களில் உறுப்பினர்களுக்கு, வீட்டுக்கடன், நகைக்கடன், அடமான கடன் போன்றவை வழங்கப்படுகின்றன.
கடன் வாங்கியவர்கள் உரிய காலத்தில் பல்வேறு தவணைகளாக செலுத்த வேண்டும். இதில், தவணை தவறியவர்களின் கணக்கில், அபராத வட்டி, கூடுதல் வட்டி ஆகியவை சேர்க்கப்படும்.
இதனால், பல மடங்காக அதிகரிக்கும் நிலுவை தொகையை உறுப்பினர்கள் செலுத்தாததால், கூட்டுறவு சங்கங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அபராத வட்டி தள்ளுபடி திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகும், நிலுவை தொகை அதிகமாக இருப்பதால், வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக, புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 1.32 லட்சம் உறுப்பினர்களின் கணக்குகளில், பல்வேறு கடன்களாக 3191 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதில், பெரும்பாலான கணக்குகள் நீண்ட கால கடன் வகையில் உள்ளன.
எனவே, நிலுவை தவணை தொகை, அதற்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி ஆகியவை அடங்கிய தொகையைஅசலில் சேர்த்து, மத்திய கால கடனாக, அவற்றை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.