வெள்ளை அறிக்கை தராமல் முதல்வர் வெளிநாடு பயணம்: அண்ணாமலை பேட்டி
வெள்ளை அறிக்கை தராமல் முதல்வர் வெளிநாடு பயணம்: அண்ணாமலை பேட்டி
வெள்ளை அறிக்கை தராமல் முதல்வர் வெளிநாடு பயணம்: அண்ணாமலை பேட்டி
ADDED : ஜூன் 30, 2024 05:52 PM

கோவை: ‛‛ முதல்வர் ஸ்டாலின், வெள்ளை அறிக்கை ஏதும் கொடுக்காமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் ''என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: டாஸ்மாக்கிற்கு வர வேண்டிய வருவாயில் வெளிப்படைத்தன்மை இல்லை என சிஏஜி கூறியுள்ளது. இந்த அறிக்கை எதிர்பார்த்த ஒன்று தான். போதை அதிகமாக வேண்டும் என்று கஞ்சா, கள்ளசாராயத்தை நோக்கி செல்கின்றனர். டாஸ்மாக் நிறுவனமே இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குகிறது. மது குறித்து அமைச்சர் துரைமுருகன் சொன்னது உண்மைதான். இதற்கு தமிழக அரசே காரணம்.
நகைச்சுவை
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவின் தரம் குறித்து சோதிக்கப்பட வேண்டும். அமைச்சரின் கருத்தை நகைச்சுவை என கடந்து செல்லாமல், உண்மையை பரிசோதனை செய்ய வேண்டும். தி.மு.க., அமைச்சரவையில் உள்ள பிரச்னைகள் சட்டசபையில் தெரிவதாக நாங்கள் கருதுகிறோம்.
சென்னையில் சுகாதாரம் அதளபாதாளத்தில் உள்ளது. இதனை பற்றி சுகாதார அமைச்சர் உட்பட யாரும் பேசுவது கிடையாது. சுகாதாரமின்மையால் சென்னையி்ல் எத்தனையோ பேர் எத்தனையோ நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது பற்றி சட்டசபையில் பேசுவது கிடையாது. வேறு விஷயங்களை பேசுகின்றனர்.
வெள்ளை அறிக்கை
முதல்வர் வெளிநாடு செல்வது தவறு இல்லை. ஆனால், தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை கொடுக்காமல் வெளிநாடு செல்கிறார். முதல்வர் தனிப்பட்ட பயணமாக இருந்தால் சந்தோஷம். ஆனால், அரசு அதிகாரிகளுடன் செல்லும் போது மக்கள் கணக்கு கேட்கின்றனர். 3 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாடடு பயணங்களால் எந்த நன்மையும் இல்லை. எதுவும் வராமல் வெளிநாட்டு பயணம் ஏன் என்பது சாதாரண மனிதனின் கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.