இன்று முதல் 26 வரை மழை பெய்ய வாய்ப்பு
இன்று முதல் 26 வரை மழை பெய்ய வாய்ப்பு
இன்று முதல் 26 வரை மழை பெய்ய வாய்ப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:11 AM

சென்னை, :'தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 26ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8:30 மணிக்கு, ஒடிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவியது.
மேகமூட்டம்
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 10 செ.மீ., மழையும், மேல்பவானியில் 8, நடுவட்டம், மேல்கூடலுார், கோவை மக்கினம்பட்டி பகுதிகளில் தலா 6 செ.மீ., மழையும் பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில், கன மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மழை தொடரும் நிலையில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டருடன், முதல்வர் தொலைபேசியில் பேசினார்.
மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.