இறைச்சிகடைக்காரர் வெட்டிக்கொலை உறவினர்கள் மறியல்
இறைச்சிகடைக்காரர் வெட்டிக்கொலை உறவினர்கள் மறியல்
இறைச்சிகடைக்காரர் வெட்டிக்கொலை உறவினர்கள் மறியல்
ADDED : ஜூன் 17, 2024 12:43 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இறைச்சி கடைக்காரர் நேற்று அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகாசி கிருஷ்ணநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கிலியாண்டி மகன் பிரசாந்த் 28. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவி மகாலட்சுமியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் ஆட்டுகிடா வெட்டுதல், பன்றி கறி விற்பது போன்ற தொழில்களை செய்து வந்தார்.
கடந்த வாரம் கிருஷ்ணன்கோவிலில் ஆட்டுக்கறி கடை போட்டு விற்பனை செய்துள்ளார். இந்த வாரமும் அதே பகுதியில் கடை போட்டு கறி விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு உறவினர் வீரபாண்டியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
அதிகாலை 4:00 மணிக்கு ஆட்டுகறிக்கடை போட வீரபாண்டி தேடிய போது பிரசாந்தை காணவில்லை. அதிர்ச்சியடைந்த வீரபாண்டி அப்பகுதியில் தேடிய போது தங்கவேல் எலக்ட்ரிக்கல் கடை முன் உள்ள காலி இடத்தில் உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நேற்று மதியம் 3:10 மணிக்கு அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.