பண விவகாரத்தில் பா.ஜ., நிர்வாகியை துன்புறுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பண விவகாரத்தில் பா.ஜ., நிர்வாகியை துன்புறுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பண விவகாரத்தில் பா.ஜ., நிர்வாகியை துன்புறுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 06, 2024 09:29 PM
சென்னை:'பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிமன்ற அனுமதியுடன்தான், பா.ஜ., நிர்வாகியை அழைக்க வேண்டும்; துன்புறுத்தக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 6ல் சென்னை தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 3.98 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்தனர். பின் வழக்கு. சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இவ்விவகாரத்தில், பா.ஜ., தமிழக அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை எதிர்த்தும் வழக்கை ரத்து செய்யக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, ''விசாரணைக்கு நேரில் ஆஜரான மனுதாரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மறுநாள், மொபைல் போன் மற்றும் சிம் கார்டுகளை ஒப்படைக்கும்படி, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்,'' என்றார்.
அப்போது, 'மனுதாரரின் மொபைல் போன் எதற்கு; இது துன்புறுத்துவதற்கு சமம். அதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்; யாருடன் பேசினார் என்ற தகவல்களை, சி.டி.ஆர்., எனும் அழைப்பு விபரங்கள் வாயிலாக அறியலாமே' என, நீதிபதி கேள்வி எழுப்பினர்.
சி.பி.சி.ஐ.டி., தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார்,''பணம் பறிமுதல் செய்த நாளில் மனுதாரர் எங்கிருந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது. அதை தெரிவிக்காததால், மொபைல் போனை சமர்ப்பிக்கக் கோரினோம். போனை கேட்பதால் எந்த உரிமையும் பாதிக்கப்படாது. அவரை துன்புறுத்தவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள், 'வாட்ஸாப்' வாயிலாக பேசியதால், சி.டி.ஆர்., வாயிலாக அழைப்பு விபரங்களை எடுப்பதில் சிரமம் உள்ளது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
போலீசாரின் பதில் மனுவில், மனுதாரர் தொடர்பு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. அவரை துன்புறுத்தும் நோக்கில் மொபைல் போன், சிம் கார்டுகளை சமர்ப்பிக்கும்படி, விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பி உள்ளார். அவர், தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.
வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றபோதும், மனுதாரர் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், அவரை துன்புறுத்தக்கூடாது. தேவைப்பட்டால், நீதிமன்ற அனுமதியுடன் மனுதாரரை விசாரணைக்கு அழைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.