வங்கதேச கலவரம் காரணமாக ஆடை ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு
வங்கதேச கலவரம் காரணமாக ஆடை ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு
வங்கதேச கலவரம் காரணமாக ஆடை ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 06:35 AM

மேட்டுப்பாளையம்: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால், இந்திய ஜவுளித்துறையில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகள் பெரிதும் பயன்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் போராட்டம் காரணமாக, அந்நாட்டின் நிலைமை சிக்கலாகி வருகிறது. இதன் காரணமாக ஜவுளி துறையில், உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. இதனால் நம் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, 'இந்திய டெக்ஸ்பிரனர்ஸ்' கூட்டமைப்பின் கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:-
வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டு சிக்கல்கள், இன்னும் 15 முதல் 20 நாட்களில் சரியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலால், நமக்கு உடனடி பலன்கள் கிடைக்க வாய்ப்பு குறைவு.
ஆனால், நீண்டகால நோக்கில், வெளிநாட்டு வர்த்தகர்கள், இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யும் திறன் போன்ற சாதகமான அம்சங்களால், இங்கு வர்த்தகத்தை அதிகப்படுத்த விரும்புவர். ஆடைகள் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேசமயம் நாம், நம் போட்டித்திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே, வங்கதேச உற்பத்தியாளர்களுடன் போட்டியிட முடியும்.
அதே போல, நம் நுால் மற்றும் துணிகள் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி ஆவதால், அங்கு விரைவாக இயல்பு நிலை திரும்புவது, அனைவருக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தற்போதைய சூழலில், வங்கதேசத்தில் இருந்து கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் வணிகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி குறைந்தால், தமிழகத்தில் உள்ள நுாற்பாலைகள் பெரிதும் பயன்பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.