முறையாக பதிவு செய்யாத ஆம்னி பஸ்களுக்கு தடை
முறையாக பதிவு செய்யாத ஆம்னி பஸ்களுக்கு தடை
முறையாக பதிவு செய்யாத ஆம்னி பஸ்களுக்கு தடை
ADDED : ஜூன் 12, 2024 05:25 AM

சென்னை: தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாத, வெளிமாநில ஆம்னி பஸ்களுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் ஆம்னி பஸ்கள் மீது நாளை முதல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுலா பயணியரை ஏற்றிச் செல்ல, ஆம்னி பஸ்களுக்கு, அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு வழங்க, மத்திய மோட்டார் வாகனச் சட்டம் வழி வகுத்துள்ளது. ஆனால், இந்த அனுமதியை பெற்ற சில ஆம்னி பஸ்கள், விதிகளை மீறி இயங்குகின்றன.
அதாவது, ஒப்பந்த அடிப்படையில் சுற்றுலாவுக்கு பயணியரை அழைத்துச் செல்லாமல், எஸ்.எம்.எஸ்., இ-டிக்கெட் செயலிகள் வாயிலாக டிக்கெட் வழங்கி, பல இடங்களில் ஏற்றி, இறக்குகின்றனர். ஒரு மாநிலத்தில் பயணியரை ஏற்றி, வெவ்வேறு மாநிலங்களில் பல இடங்களில் இறக்குகின்றனர்.
இந்த பஸ்களில் பயணியரின் பெயர் பட்டியல், பயண தேதி, பாதை உள்ளிட்ட விபரங்கள் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பயணியரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது, நாளை முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெளிமாநில உரிமம் பெற்றுள்ள, 652 ஆம்னி பஸ்களை, தமிழக பதிவெண் பெறும்படி பலமுறை அறிவுறுத்தி உள்ளோம்; மூன்று முறை அவகாசம் அளித்துள்ளோம்; 105 ஆம்னி பஸ்கள் மட்டுமே தமிழக பதிவெண் பெற்றுள்ளன.
அதனால், வெளிமாநில பதிவெண் உள்ள ஆம்னி பஸ்களை, பயணியர் புறக்கணிக்க வேண்டும். மீறி பயணிப்போருக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.