ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு
ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு
ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 01:54 AM
சென்னை:'ப்ளூ கிராஸ்' அமைப்பை, பிராணிகள் நல வாரியம் ஏற்று நடத்தக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
ப்ளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரில், கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டது. அமைப்பில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவது இல்லை; பராமரிப்பும் முறையாக இல்லை என தெரிய வந்துள்ளது. ப்ளூ கிராசுக்கு தமிழக அரசு நிலம் வழங்கி உள்ளது.
எனவே, அதை, பிராணிகள் நலவாரியம் ஏற்று நடத்த வேண்டும். ப்ளூ கிராஸ் பெறும் நிதி விபரங்களை, தணிக்கை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக பிராணிகள் நல வாரியம், இந்திய பிராணிகள் நல வாரியம், கால்நடைத் துறை, வருமான வரித் துறை, ப்ளூ கிராஸ் அமைப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.