Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குறுவை தொகுப்பு திட்டத்தை ஒரு வாரத்தில் முடிக்க கெடு

குறுவை தொகுப்பு திட்டத்தை ஒரு வாரத்தில் முடிக்க கெடு

குறுவை தொகுப்பு திட்டத்தை ஒரு வாரத்தில் முடிக்க கெடு

குறுவை தொகுப்பு திட்டத்தை ஒரு வாரத்தில் முடிக்க கெடு

ADDED : ஜூலை 26, 2024 12:57 AM


Google News
சென்னை:புதிதாக சாகுபடியை துவங்கவுள்ள விவசாயிகளின் படையெடுப்பை தவிர்ப்பதற்காக, குறுவை தொகுப்பு திட்டத்தை ஒரு வாரத்தில் முடிக்க வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கும். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து அதே மாதம் 12ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.

நடப்பாண்டு, அணையில் போதுமான நீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. அதனால், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 78.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, 2,000 டன் நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இயந்திர நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய், பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. நுண்ணுாட்ட சத்துக்கள், துத்தநாக சல்பேட், ஜிப்சம், உள்ளிட்டவையும், 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் கொட்டும் மழையால், நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இதனால், அணையில் இருந்து விரைவில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஆற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகள், குறுவை தொகுப்பு திட்டத்தை கேட்டு வேளாண் அலுவலகங்களை படையெடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, தற்போது சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, இம்மாத இறுதிக்குள் குறுவை தொகுப்பு திட்டத்தை முடிக்க வேளாண்துறை முடிவெடுத்துள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு, இயல்பான அளவில் குறுவை சாகுபடி நடக்கவில்லை. யூரியாவை தவிர பலவகை உரங்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே, கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் உரங்கள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி, 1 லட்சம் டன் யூரியா, 24,613 டன் டி.ஏ.பி., 19,273 டன் பொட்டாஷ், 35,040 டன் கூட்டு உரங்கள், கையிருப்பில் உள்ளன.

மேட்டூர் அணை திறக்கப்பட்டால், உரங்கள் கையிருப்பு குறையும் என வேளாண் துறையினர் எதிர்பார்க்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் வழக்கமான அளவில் உரங்களை கேட்டு பெறுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us