Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சரியாக வழக்கு நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கண்டிப்பு

சரியாக வழக்கு நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கண்டிப்பு

சரியாக வழக்கு நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கண்டிப்பு

சரியாக வழக்கு நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு கண்டிப்பு

ADDED : ஜூலை 03, 2024 01:38 AM


Google News
சென்னை, :வழக்கில் ஆஜராகாமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வந்தாலோ, முறையாக வழக்கை நடத்தாமல் இருந்தாலோ, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய வழக்கில், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் செயல்பட்டதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக்கோரி, சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

குற்றச்சாட்டு


இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ''மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.

நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாமல், வழக்கை முறையாக நடத்தாமல், ஒருதலைபட்சமாக தீர்ப்பு வருகிறது,'' என்றார்.

இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுக்கு எதிரான வழக்குகளில், ஒருதலைபட்சமாக தீர்ப்புகள் வருவதை பார்க்கிறோம். மாவட்ட நீதிமன்றங்களில், அரசு வழக்கறிஞர்கள் முறையாக வழக்குகளை நடத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.

அரசு தரப்பில், வழக்குகளை முறையாக அரசு வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளாத பட்சத்தில், அது ஒழுங்கீனம் மட்டுமல்ல, குற்றமுமாகும். அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும் அதற்கு பொறுப்பு.

கடமை தவறும் அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசு சார்புடைய வழக்குகளை, குறிப்பாக அரசு சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் வழிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும்.

வழிமுறைகள்


வழக்குகள் முறையாக நடத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்படி, அரசு துறை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் வழிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். வழக்குகள் தகுதி அடிப்படையில் சட்டப்படி முடிவு செய்யப்பட வேண்டும்.

வழக்குகளில் ஆஜராகாமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிக்கும் வகையில் அனுமதித்தால், அதற்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, இதுகுறித்த வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை, மூன்று வாரங்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர்கள் பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு எதிரான விசாரணையை, பார் கவுன்சில் விரைவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us