Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி 20 மாவட்ட செயலர்களை களையெடுக்க இ.பி.எஸ்., முடிவு

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி 20 மாவட்ட செயலர்களை களையெடுக்க இ.பி.எஸ்., முடிவு

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி 20 மாவட்ட செயலர்களை களையெடுக்க இ.பி.எஸ்., முடிவு

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., படுதோல்வி 20 மாவட்ட செயலர்களை களையெடுக்க இ.பி.எஸ்., முடிவு

ADDED : ஜூன் 06, 2024 11:00 PM


Google News
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியடைந்துள்ளதால், 20 மாவட்ட செயலர்களை நீக்கம் செய்து விட்டு, 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலரை நியமிக்க, இ.பி.எஸ்., முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017ல் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 2021ல், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,- பா.ம.க., இருந்தபோது, 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மொத்தம் உள்ள, 39 தொகுதிகளில், 11 தொகுதிகளில் மூன்றாம் இடமும், கன்னியாகுமரியில் நான்காம் இடத்துக்கும், அ.தி.மு.க., சென்றது. 2019 லோக்சபா தேர்தலில், 23 இடங்களில் போட்டியிட்டு, 33.52 சதவீதம் பெற்ற தி.மு.க., இத்தேர்தலில், 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீதம் ஓட்டுக்கள் என, கடந்த தேர்தலை விட ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

அதே போல், 2019ல், 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 19.39 சதவீதம் பெற்ற, அ.தி.மு.க., இத்தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீதம் ஓட்டுக்கள் பெற்று, தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. 2023ல், பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகிய நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகளில், அக்கட்சி பொதுச் செயலர் இ.பி.எஸ்., ஈடுபட்டார்.

ஏற்கனவே, அ.தி.மு.க.,வில், 75 மாவட்ட செயலர்கள் இருந்த நிலையில், இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கும் பணியை தொடங்கினார். அதையொட்டி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் என, புதிதாக ஏழு மாவட்ட செயலர்களை நியமித்தார்.

மாவட்ட செயலரின் எண்ணிக்கை, 82 ஆக உயர்ந்தது. இதற்கு மூத்த அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அத்திட்டத்தை கைவிட்டார். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கு பின், இரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் என, நியமிக்க இ.பி.எஸ்., முடிவு செய்துள்ளார்.

லோக்சபா தேர்தலில், சட்டசபை தொகுதி மற்றும் ஓட்டுச்சாவடி மையம் அடிப்படையில் பட்டியல் கேட்டு வாங்கியுள்ளார் இ.பி.எஸ்., பட்டியலின்படி, 20 மாவட்ட செயலர்களை நீக்கம் செய்து, புதிய மாவட்ட செயலர்கள் நியமிக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் பெரிய அளவில் களையெடுப்பு இருக்கும் என, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:

ஜெ., இருந்தபோது சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, தொகுதி செயலர்களை நியமித்து வந்தார். இதில், தனி தொகுதியாக இருந்தால், அந்த சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகளை, அந்த பதவியில் நியமிப்பார். 'சீட்' வழங்கும்போது, தொகுதி செயலருக்கு பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை மற்றும் இடைத்தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில், தொகுதி செயலரை நியமிக்கவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு பின், மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள், லோக்சபா தொகுதிக்கு மட்டுமே பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர் நியமிக்கவில்லை.

ஜெ., இருந்தபோது, ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்., மன்றத்துக்கு முக்கிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியை பலமாக வழிநடத்தி வந்தார். அவர் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில், ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, எம்.ஜி.ஆர்., மன்றம் பெயரளவில் தான் உள்ளது. தலைமைகழக பேச்சாளர், நட்சத்திர பேச்சாளருக்கு தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் இல்லை.

இதுதவிர, பட்டியல் இன மக்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வந்தது. ஜெ., மறைவுக்கு பின், தனி தொகுதிகளில், பட்டியல் இனத்தவருக்கு கட்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் முக்கிய பதவி வழங்கவில்லை. பெரம்பலுார் மாவட்ட செயலர் பதவி மட்டுமே, பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனி தொகுதிகளில் கூட பட்டியல் இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாததால், தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. பட்டியல் இன ஓட்டுக்கள், தி.மு.க., கூட்டணிக்கு சென்றுள்ளது.

தி.மு.க., மற்றும் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வை சிதைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை எதிர்க்கட்சியாக கூட வர விடாமல் ஜெ., 'வியூகம்' வகுத்து, தேர்தல் பணிகளை மேற்கொண்டார். அதேபாணியில், இ.பி.எஸ்., செயல்பட்டால் மட்டுமே, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்.

இவ்வாறு கூறினர்.

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us