Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பேசியதை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் அண்ணாமலைக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

பேசியதை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் அண்ணாமலைக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

பேசியதை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் அண்ணாமலைக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

பேசியதை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் அண்ணாமலைக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

ADDED : ஜூலை 07, 2024 04:45 AM


Google News
மதுரை: ''பழனிசாமி குறித்து பேசியதை அண்ணாமலை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை 'நம்பிக்கை துரோகி' என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதற்கு அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் நேற்று உதயகுமார் கூறியதாவது: அரசியல் அனுபவம் இல்லாமல், பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதுாறு பரப்பி அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிவருகிறார். அவர் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார். அரவக்குறிச்சி, கோவையில் தேர்தலில் நின்று தோற்றார். பிரதமர் மோடி, 15 மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தும் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. காரணம் அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள்.

2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து 19.39 சதவீதம் ஓட்டுகள் பெற்றோம். தற்போது 40 தொகுதியில் போட்டியிட்டு 20.46 சதவீதம் ஓட்டுகள் பெற்று ஒரு சதவீதம் அதிகரித்துள்ளோம். தமிழகத்தில் பிரதமரை முன்னிலைப்படுத்தியதால்தான் பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் கிடைத்தன. அண்ணாமலைக்காக யாரும் ஓட்டளிக்கவில்லை. பா.ஜ.,வில் குற்றப்பின்னணி உடையவர்களை அண்ணாமலை முன்னிலைப்படுத்துகிறார். உழைத்த மூத்தவர்களை புறக்கணித்து வருகிறார்.

பழனிசாமி தமிழக உரிமை காக்க வேண்டி உழைத்து வருகிறார். அண்ணாமலை தமிழகத்திற்கு என்ன செய்தார். தமிழகத்திற்கு பேரிடர் நிதி பெற்று தந்தாரா. எந்த ஒரு திட்டத்திற்காகவும் அவர் பேசவில்லை. அண்ணாமலை சூழ்ச்சி, திட்டம், ஆசை குறித்து எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் விரிக்கும் வலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள்.

பழனிசாமி குறித்து பேசியதை வாபஸ் வாங்காவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவோம். ஈரோடு இடைத்தேர்தலை பற்றி அண்ணாமலை பேசியுள்ளார்.

பொதுவாக இரண்டு தலைவர்கள் ரகசியமாக பேசும் கருத்துக்களை ரகசியமாக வைக்க வேண்டும். ஆனால் அரசியல் நாகரீகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். இதே போன்று டில்லி தலைமை பேசியதை கூட தனக்கு ஆபத்து வரும்போது அண்ணாமலை வெளியிடுவார். இதனால் டில்லி தலைமைக்கு கூட அவரால் ஆபத்து இருக்கிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us