நீக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை அ.தி.மு.க., பழனிசாமி திட்டவட்டம்
நீக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை அ.தி.மு.க., பழனிசாமி திட்டவட்டம்
நீக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை அ.தி.மு.க., பழனிசாமி திட்டவட்டம்
ADDED : ஜூலை 18, 2024 08:22 PM
சென்னை:அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை, மீண்டும் சேர்க்கும் எண்ணமே கிடையாது என்பதை, கட்சியினரிடம் பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில், 10ம் தேதி முதல், லோக்சபா தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து பழனிசாமி பேசி வருகிறார்.
அப்போது, நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பதை, பழனிசாமி சொல்லி வருகிறார்.
இந்நிலையில், கட்சியை ஒருங்கிணைக்கப் போவதாக கூறி, சசிகலா நேற்று முன்தினம் தென்காசியில் சுற்றுப்பயணத்தை துவங்கினார். அதனால், மீண்டும் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட உள்ளதாக, தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், 'சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை' என தெரிவித்தார். பழனிசாமியின் குரலை அவர் எதிரொலித்துள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து, பழனிசாமி தலைமையில், தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2026ல் ஆட்சி அமைப்பதற்கான வழி வகைகளையும், நல்ல பல கருத்துக்களையும், அதில் பங்கேற்கும் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என, ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.