கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இழக்கிறது அ.தி.மு.க.,
கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இழக்கிறது அ.தி.மு.க.,
கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இழக்கிறது அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 05, 2024 05:53 AM

திருப்பூர் : 'இரும்புக் கோட்டை' என கூறி வந்த நிலையில், லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெற முடியாதது, அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'கொங்கு மண்டலம் அ.தி.மு.க.,வின் கோட்டை; யாராலும் அசைக்க முடியாது' என, கூறியிருந்தார்.ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இது கட்சியினர் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க., வைச் சேர்ந்த சிலர் கூறியதாவது:
தமிழக தேர்தல் களத்தில் கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வுக்கென தனி செல்வாக்குண்டு. அதனை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பதை நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாயிலாக அறிய முடிகிறது. இதற்கான காரணத்தை கட்சித்தலைமை தீர விசாரிக்க வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலிலும் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பெற்ற ஓட்டுகள், வியக்க வைக்கின்றன. இதே வேகத்தில் அவர்கள் அரசியல் செய்தால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.