அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் இடைக்கால முன் ஜாமின் மனு தள்ளுபடி
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் இடைக்கால முன் ஜாமின் மனு தள்ளுபடி
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் இடைக்கால முன் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 04, 2024 11:08 PM

கரூர்: தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால், இடைக்கால முன்ஜாமின் கேட்டு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்களால் கிரையம் செய்து கொண்டதாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார் -- பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமின் கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு, கடந்த 25ல் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் அருகே வாங்கல் காட்டூரை சேர்ந்தவர் பிரகாஷ், 50. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் எலக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் கொடுத்த புகார்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், யுவராஜ் உள்ளிட்ட பலர் மீது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து விஜயபாஸ்கர், 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். அவரது தந்தை ராமசாமி, 78, உடல் நலக்குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள வசதியாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு மற்றும் வாங்கல் போலீசார் பதிவு செய்த வழக்கில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் கடந்த 2ல் மனு தாக்கல் செய்தார்.
நேற்று வழக்கு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் மற்றொரு வழக்கில், முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு மீது, இன்று விசாரணை நடக்கிறது.