அமுல் தயிரை கண்டு நடுங்கும் ஆவின்: குடோனில் இறக்கி விற்க நெருக்கடி
அமுல் தயிரை கண்டு நடுங்கும் ஆவின்: குடோனில் இறக்கி விற்க நெருக்கடி
அமுல் தயிரை கண்டு நடுங்கும் ஆவின்: குடோனில் இறக்கி விற்க நெருக்கடி
ADDED : ஜூன் 12, 2024 01:04 AM

சென்னை:அமுல் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டுகளை, குடோனில் இறக்கி விற்பனை செய்வதற்கு, ஆவின் வாயிலாக மறைமுக நெருக்கடி தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் ஆவின் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. இது தற்போது, 26 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
இதனால், பால் பொருட்கள் உற்பத்தி முடங்கியுள்ளதால், ஆவின் நிறுவனம் நாள்தோறும், 1 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆவினுக்கு போட்டியாக குஜராத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான அமுல் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனம், ஆந்திர மாநிலம், சித்துாரில், பால் பண்ணையை நிறுவியுள்ளது.
அங்கு தயாரிக்கப்படும் பால், தயிர், பனீர் ஆகியவற்றை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விற்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் பால் விற்பனையை அனுமதிக்கக் கூடாது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
கடும் எதிர்ப்பு காரணமாக, பால் விற்பனையை அமுல் நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. ஆனால், தயிர் மற்றும் பனீர் விற்பனையில் இறங்கியுள்ளது.
இதற்காக, செங்குன்றம் அருகே அலமாதியில், அமுல் நிறுவனத்திற்கு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்த விற்பனையாளர்களும், 1 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் கட்டணம் செலுத்தி, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
குடோனில் தயிர் மற்றும் பனீரை இறக்கி விற்பனை செய்வதற்கு, ஆவின் அதிகாரிகள் மறைமுக நெருக்கடி கொடுப்பதால், பூந்தமல்லியில், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, அவற்றில் இருந்து தயிர் மற்றும் பனீர், மொத்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிலைக்கு, அமுல் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.