Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பா.ம.க., விவரமில்லாமல் கூட்டணி வைக்கவில்லை கடலுாரில் இயக்குநர் தங்கர்பச்சான் பேட்டி

பா.ம.க., விவரமில்லாமல் கூட்டணி வைக்கவில்லை கடலுாரில் இயக்குநர் தங்கர்பச்சான் பேட்டி

பா.ம.க., விவரமில்லாமல் கூட்டணி வைக்கவில்லை கடலுாரில் இயக்குநர் தங்கர்பச்சான் பேட்டி

பா.ம.க., விவரமில்லாமல் கூட்டணி வைக்கவில்லை கடலுாரில் இயக்குநர் தங்கர்பச்சான் பேட்டி

ADDED : ஜூன் 06, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
கடலுார்: விவரமில்லாமல் கூட்டணி வைக்கவில்லை என, பா.ம.க., கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.

கடலுாரில் அவர் கூறியதாவது;

தேர்தலில் போட்டியிட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி எனக்கு வாய்ப்பு வழங்கினர். கடலுார் மாவட்டத்தில் இதுவரை தேர்வு செய்யப்பட்ட 17 எம்.பி.,க்கள், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எம்.பி.,க்கள் பெயர் கூட மக்களுக்கு தெரியவில்லை. இந்த தேர்தலில் எனக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து 244 ஓட்டுகள் கிடைத்தது. எனக்கு ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோடு எனது அரசியல் பயணம் நிற்கபோவதில்லை. கடந்த முறை வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி.,க்களால் தமிழக மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. தற்போது, 39 பேரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்களால் என்ன கிடைக்கப்போகிறது. எதற்காக, அவர்களுக்கு ஓட்டு போட்டீர்கள்.

தமிழக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டாகியும் ஒன்றும் நடக்கவில்லை. அண்ணாதுரை பெயரை எவ்வளவு காலத்திற்கு கூறி மக்களை ஏமாற்றுவீர்கள். அண்ணாதுரை சாராயம் விற்று ஆட்சி நடத்த கூறவில்லை. சாராயம் இல்லாமல் ஆட்சி நடத்துங்கள் பார்ப்போம். அண்ணாதுரை வளர்த்த தி.மு.க.,வா இன்றைக்கு உள்ளது. அண்ணாதுரை வீடு கூட இல்லாமல் இருந்தார். ஆனால், இன்று தி.மு.க.,வினர் மன்னர்கள் மாதிரி வாழ்கின்றனர்.

பா.ஜ., தமிழகத்திற்குள் வரக்கூடாது எனக்கூறி மக்களை சிறைப்படுத்தி வைத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு பலன் கிடைக்கும். கடந்த 5 ஆண்டாக எதுவும் கிடைக்கவில்லை. மோடி தான் ஆட்சி அமைக்கிறார். மறுபடியும் 5 ஆண்டுகள் கவர்னருடன் சண்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க போகிறார்கள்.

கூட்டணி தான் தேர்தலில் வெற்றியை தரும். விவரம் தெரியாமல் கூட்டணி வைக்கவில்லை. கட்சி துவங்கி 45 ஆண்டுகளாக மாறி, மாறி கூட்டணி வைத்து அவர்களை மட்டும் மேலே துாக்கிவிட்டு, கடைசியாக 5 சீட்டுக்கும், 4 சீட்டுக்கும் கையேந்தி நிற்பதா. பா.ம.க.,விற்கு 2026 ஒரு முக்கியமான தேர்தல். அதை நோக்கி தான் நாங்கள் செல்கிறோம்.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுடன், பா.ம.க., இருந்தால் அவர்களுக்கு தான் லாபம். பா.ம.க., எப்போது தான் ஆள்வது. அதற்கான எதிர்கால திட்டங்களுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அது போக, போக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்டச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ஜெகன், கார்த்திகேயன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us