நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு பல கி.மீ.,க்கு அணிவகுத்த வாகனங்கள்
நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு பல கி.மீ.,க்கு அணிவகுத்த வாகனங்கள்
நெடுஞ்சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்' அமைப்பு பல கி.மீ.,க்கு அணிவகுத்த வாகனங்கள்
ADDED : ஜூன் 25, 2024 01:43 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், தமிழக எல்லையிலுள்ள ஜூஜூவாடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை சந்திப்பு, தர்கா, சீத்தாராம் மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து மக்கள் செல்வது வழக்கம். இதனால் விபத்து ஏற்படுகிறது.
இப்பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் வாகன ஓட்டிகளை எச்சரிக்க, கடந்த சில நாட்களாக 'ரம்பிள் ஸ்டிரிப்' எனும், சாலை பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.
வேகமாக வரும் வாகனங்கள் எச்சரிக்கையாக அந்த பகுதியை கடக்க, குலுங்கும் வகையில், வெள்ளை நிறத்தில் ரம்பிள் ஸ்டிரிப் எனும் கோடுகள் வரிசையாக அமைக்கப்பட்டன. இப்போது, அந்த முறையை மாற்றி, சாலையை வெட்டி, ரம்பிள் ஸ்டிரிப் அமைக்கப்படுகிறது.
இது, சீத்தாராம்மேடு பகுதியில் நேற்று அமைக்கப்பட்டது. இதில், கனரக இயந்திரம் பயன்படுத்தப்பட்டதால், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை முதல், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், நீண்ட நேரமாக, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேம்பாலம், ராயக்கோட்டை சாலை சந்திப்பு மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாகலுார் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மதியத்திற்கு பின், ரம்பிள் ஸ்டிரிப் அமைக்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பாதிப்பு குறைந்தது.