ரயில் நிலையங்களில் ஏழு ஆண்டுகளில் 9,630 சிறார் மீட்பு
ரயில் நிலையங்களில் ஏழு ஆண்டுகளில் 9,630 சிறார் மீட்பு
ரயில் நிலையங்களில் ஏழு ஆண்டுகளில் 9,630 சிறார் மீட்பு
ADDED : ஜூலை 19, 2024 12:48 AM
சென்னை:தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்பு படையினர், 9,630 சிறுவர்களை மீட்டுள்ளனர்.
பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமையின் கொடுமை போன்ற காரணங்களால், சிறுவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரயில்களில், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது, அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்கின்றனர்.
தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில், 2018 முதல் 2024 மே வரை, 9,630 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்ட 9,630 சிறுவர்களில், 8,698 பேர் ஓடிப்போனவர்கள். மேலும், 132 பேர் காணாமல் போனவர்கள்; 309 பேர் ஆதரவற்றவர்கள்; 19 பேர் கடத்தப்பட்டவர்கள்; 44 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
குழந்தைகள் கடத்தலில் இருந்து, 105 பேர் காப்பாற்றப்பட்டனர். கடந்த ஆண்டில் 1,215 சிறுவர் - சிறுமியர்; நடப்பாண்டில் 788 சிறுவர் - சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு ரயில் நிலையங்களில், குழந்தை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிறுவர் -- சிறுமியர் மீட்கப்படும்போது, அவர்களிடம் ஒப்படைக்கப்படுவர். தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவர்.
குழந்தைகள் மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு, பல்வேறு தரப்பினர் ஆதரவு ஆகியவற்றால், சிறுவர்- சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர்-சிறுமியருக்கு ஏதாவது உதவி தேவைப்படும்போது, ரயில்வே உதவி எண் 139, குழந்தை உதவி எண் 1098ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.