Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,500 பேருக்கு மாரடைப்பு சிகிச்சை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,500 பேருக்கு மாரடைப்பு சிகிச்சை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,500 பேருக்கு மாரடைப்பு சிகிச்சை

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,500 பேருக்கு மாரடைப்பு சிகிச்சை

ADDED : ஜூலை 10, 2024 01:09 AM


Google News
சென்னை:''இதயம் காப்போம் திட்டத்தில், 8,500 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே மாரடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அவருடன் செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி ஆகியோரும் சென்றுஉள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவ கட்டமைப்பு குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:

சுகாதாரத் துறையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது.

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் வாயிலாக, 2009 முதல் இதுவரை, 13,625 கோடி ரூபாய் செலவில், 1.4 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

கடந்த 2008ல் துவங்கப்பட்ட, '108' ஆம்புலன்ஸ் சேவையில், 1,353 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த இடத்தில் இருந்தாலும், 11:23 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வாகனங்கள் சென்றடையும் வகையில், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

'இன்னுயிர் காப்போம்' திட்டம் வாயிலாக, 2.33 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். உடல் உறுப்பு தானத்தில், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு என, 7,783 உறுப்புகள்; சிறிய உறுப்புகள், திசுக்கள் என, 3,950 தானமாக பெறப்பட்டு, மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், உடல் உறுப்பு தானத்தில், இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், ஒரு கோடி பேருக்கு மேல் பயனடைந்து வருகின்றனர்.

'இதயம் காப்போம்' திட்டம் 2023 ஜூன் மாதத்தில் துவங்கப்பட்டு, இதுவரை 8,500 நோயாளிகளுக்கு மாரடைப்பு மருந்துகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us