தொழிலாளர் ஆதாரை சரிபார்க்க 45 பயோமெட்ரிக் சாதனங்கள்
தொழிலாளர் ஆதாரை சரிபார்க்க 45 பயோமெட்ரிக் சாதனங்கள்
தொழிலாளர் ஆதாரை சரிபார்க்க 45 பயோமெட்ரிக் சாதனங்கள்
ADDED : ஜூன் 08, 2024 01:33 AM
சென்னை:அமைப்பு சாரா நல வாரியங்களில், தொழிலாளர்களின் ஆதார் எண்ணை சரிபார்க்கும் பணியை, கைரேகை வழியாக மேற்கொள்ள, 45 பயோமெட்ரிக் சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
சென்னையில், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய இணையதள செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
அமைச்சர் கணேசன் பேசியதாவது:
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில், 44.09 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதள மென்பொருள் செயல்பாட்டிற்காக, ஐந்து சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம், வாரிய இணையதள சர்வர், தொழில்நுட்ப காரணத்தால் இயங்கவில்லை.
பின்னர் பழுது பார்க்கப்பட்டு, டிச., 26 முதல் இயங்கி வருகிறது. சர்வர் பழுது காரணமாக, இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மறு பதிவேற்றம் செய்து, பணிகள் தொய்வின்றி நடக்கின்றன.
நிலுவை கேட்பு மனுக்களுக்கான ஆவணங்களை, தொழிலாளர்களிடம் இருந்து பெற்று பதிவேற்றம் செய்ய, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களில், சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இ - சேவை மையங்களில், இலவசமாக தொழிலாளர்களின் ஆவணங்களை, வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு, தொழிலாளர்களிடம் இருந்து ஓ.டி.பி., பெறும் முறை நீக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் சரிபார்க்கும் பணியை, கைரேகை வாயிலாக மேற்கொள்ள, 45 பயோமெட்ரிக் சாதனங்களை கொள்முதல் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் சரிபார்த்து, 15 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த், கமிஷனர் அதுல் ஆனந்த் கலந்து கொண்டனர்.