300 ச.மீட்டர் வணிக கட்டடம் மின் இணைப்பு இனி எளிது
300 ச.மீட்டர் வணிக கட்டடம் மின் இணைப்பு இனி எளிது
300 ச.மீட்டர் வணிக கட்டடம் மின் இணைப்பு இனி எளிது
ADDED : ஜூலை 06, 2024 10:48 PM
சென்னை:வணிக பிரிவில், 300 சதுர மீட்டர், 14 மீட்டர் உயரம் உடைய கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டட விதிகளின்படி அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி, கட்டடத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்று பெற்றால் தான், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பை, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் வழங்கும்.
கோரிக்கை
வீட்டை பொறுத்தவரை, எட்டு வீடுகள் அல்லது, 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெற விலக்கு உள்ளது. இந்த சலுகை வணிக பிரிவு கட்டடங்களுக்கு இல்லை. இதனால், குறுந்தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, 300 சதுர மீட்டர் வரையும், 14 மீட்டர் உயரம் மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெற தேவையில்லை என, அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதை பின்பற்றி, வணிக பிரிவில், மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்க, பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பயன்பெறுவர்
வணிக பிரிவில், 'வாட்டர் சர்வீஸ்' போன்ற சேவை பிரிவில், குறுந்தொழில் துவக்குவோர், பணி நிறைவு சான்று கிடைக்காததால், மின் இணைப்பு பெற முடியாமல் சிரமப்பட்டனர்.
இதனால், தற்காலிக மின் இணைப்பை பெற்று பயன்படுத்தி வந்தனர்; மின் பயன்பாட்டு கட்டணம் அதிகம். தற்போது, வணிக பிரிவில் குறைந்த சதுரடி கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்று பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், பலரும் பயன் பெறுவர்.