திருச்சி சிப்காட் அமைக்க 150 ஏக்கர் இடம் தேர்வு: அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி சிப்காட் அமைக்க 150 ஏக்கர் இடம் தேர்வு: அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி சிப்காட் அமைக்க 150 ஏக்கர் இடம் தேர்வு: அமைச்சர்கள் ஆய்வு
ADDED : ஜூலை 09, 2024 10:51 PM

திருச்சி,:திருச்சியில், சிப்காட் அமைப்பதற்கான இடத்தை, அமைச்சர்கள் மகேஷ், ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். 'திருச்சியில், புதிய சிப்காட் அமைக்கப்படும்' என, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனையடுத்து, திருச்சி மாவட்டம், சூரியூரில், 150 ஏக்கரில் சிப்காட் அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இடத்தை, தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா கூறியதாவது:
மத்திய அரசு நிறுவனமான எச்.ஏ.பி.பி.,க்கு சொந்தமான இடம், சிப்காட் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, சிப்காட் தொழிற்சாலை அமைந்தால், டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும்.
திருச்சி பெல் நிறுவனத்தின் ஆர்டர்கள் குறைந்ததால், ஏராளமான தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. பெல் நிறுவனத்தில் அதிக அளவு ஆர்டர்கள் கொடுத்து அதனை மீட்க வேண்டும், என தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது வலியுறுத்தப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பெற்ற பின், பெல் நிறுவனத்தை நம்பி இருந்த தொழிற்சாலைகளை மீட்டு, உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இப்பகுதியில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த துறை சார்ந்த நிறுவனங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில், எந்த நிறுவனம் துவக்கினாலும், அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் உள்ளது. அதனால், தமிழகத்தில் தொழில் தொடங்க, பலர் முன் வருகின்றனர். அதற்காக, முதல்வர் ஸ்டாலின் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.